- அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை மக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையில் தேசிய செயற்பாட்டு மைய குழுவின் பல தீர்மானங்கள்…
அண்மையில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் கூடிய தேசிய செயற்பாட்டு மையக் குழு, அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை மக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையில் பல தீர்மானங்களை மேற்கொண்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஏற்பாடுகளின் கீழ் உள்கட்டமைப்பு, பொது வசதிகள் திட்டங்கள் மற்றும் கல்வித் துறை அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் மின்சாரத் தேவைக்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட மொரகொல்லை நீர் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தாமதமாகி வருவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மொரகொல்லை திட்டத்தை ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், திட்டத்தில் 75% பௌதீக முன்னேற்றம் மட்டுமே எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. திட்ட காலத்தினை நீடித்து , திட்டத்தை நிறைவுசெய்ய மேலதிகமாக 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டிருந்தது.
33 கிலோவாட் கோபுரங்கள் மற்றும் 13 பரிமாற்ற நிலையங்களுடன் 300 கிலோமீற்றர் நீளமான வீதிகள் அமைக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். திட்ட காலத்தை 2025 மார்ச் வரை நீடிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புக்கொண்டுள்ளதால், நிர்மாணப் பணிகள் 2024 டிசம்பருக்கு முன் நிறைவுசெய்யப்பட வேண்டும். டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் குறித்து பரிசீலனைசெய்யப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்
கல்வித் துறையை மேம்பத்தும் திட்டம் குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரால் பல சிரமங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்களை விரைவில் நிறைவுசெய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அபிவிருத்தித் திட்டங்களின் பயன் மக்களுக்கானதாகும். முன்மொழியப்பட்ட காலப்பகுதிக்குள் திட்டங்களை நிறைவுசெய்ய வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. எனவே, அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மக்களுக்கு விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க வலியுறுத்தினார். தேவையான நீடிப்புகளுடன் செயற்பாடுகளை விரைவுபடுத்த ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் மின்சக்தி அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்குள் உரிய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்வது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் திரு அனுர திஸாநாயக்க குறிப்பிட்டார்.