செயின்ட் வின்சென்ட்,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் செயின்ட் வின்சென்ட்டில் இன்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நேபாளம் அணிகள் ஆடின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 43 ரன்கள் அடித்தார். நேபாளம் தரப்பில் குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இன்று இரவு வெற்றி பெற்றதற்கு மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். இன்று நாங்கள் எங்களுடைய திறமையில் இருந்து வெகு தூரத்தில் இருந்தோம், சிறப்பாக விளையாடவில்லை. அடுத்த சில நாட்களில் பெரிய போட்டிகள் பற்றி நினைத்தால் நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
எங்களிடம் நல்ல வேகப்பந்து வீச்சு யூனிட் இருந்தது. சரியான இடத்தில் பந்து வீசினால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் கூடுதலாக ஒரு சுழல் பந்துவீச்சாளரை சேர்க்காமல் தவறு செய்து விட்டோம்.
நேபாள அணி பந்து வீசிய விதம் எங்களுக்கு மிகவும் கடுமையாக இருந்தது. அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் எங்களுடைய திட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் செய்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.