“பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்…” – சென்னை ஐகோர்ட் நீதிபதி வேதனை

சென்னை: “பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொல்லையால் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமின்றி, பணிபுரியும் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அந்தச் சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய மோகன கிருஷ்ணன் என்பவருக்கு எதிராக விசாகா குழுவில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய விசாகா குழு, மோகன கிருஷ்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியிலான விசாரணை முடியும் வரை அவரை பணியிடை நீக்கம் செய்யவும், ஒருவேளை பணியிடை நீக்கத்தை ரத்து செய்தாலும் அவரை வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது. இதை எதிர்த்து மோகன கிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை என்பது நெறி தவறும் செயல் மட்டுமல்லாது, மறைமுகமான சமூக பிரச்சினையாகவும் இருந்து வருகிறது. இந்த பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் பணியிடங்களில் பெண்களுக்கான அதிகாரத்தை குறைப்பதுடன், அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படையச் செய்கிறது. இதனால் பெண்கள் வேலையை உதற வேண்டிய நிர்பந்தமும் சில இடங்களில் ஏற்படுகிறது.

வேலையை இழக்கும் பெண்கள் குடும்ப சூழல் காரணமாக பொருளாதார ரீதியிலான கஷ்டங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பொதுவாக பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளால் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. பணிபுரியும் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அந்தச் சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் நிறுவனங்களின் பணி ஆற்றல் குறைந்து நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஊறு விளைவிக்கிறது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, மோகன கிருஷ்ணன் தரப்பில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை எனக்கூறுவதால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய விசாகா குழு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு போதிய வாய்ப்பளித்து, மீண்டும் முறையாக விசாரித்து, 60 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், மோகன கிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டு, 4 வாரங்களில் தகுந்த முடிவு எடுக்கவேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.