புதுடெல்லி,
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் 3 நாட்கள் புதிய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம், சபாநாயகர் தேர்தல் போன்றவற்றுடன் நகர்கிறது. சபாநாயகர் தேர்தல் 26-ந் தேதி நடைபெற இருக்கிறது.இதனைத்தொடர்ந்து 27-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். தொடர்ந்து வரும் நாட்களில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் மற்றும் பல்வேறு அலுவல்கள் நடக்கிறது. இப்படியே ஜூலை 3-ந் தேதியுடன் கூட்டம் நிறைவடைகிறது.
இந்த நிலையில் 2024-2025-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கலுக்கான கூட்டம் 2-ம் கட்டமாக தொடங்க இருப்பதாக தெரிகிறது. இதனையொட்டி ஜூலை 22-ந் தேதி முழு பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.இது இவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் ஆகும். இந்த 7-வது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பட்சத்தில் தொடர்ந்து 7 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த நிதி மந்திரி என்கிற பெயரை பெறுவார்.
இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தொடர்ந்து 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்திருந்தார். அதை இந்த தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் சமன் செய்திருந்தார். தற்போது அதையும் கடந்து 7-வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்
மொரார்ஜி தேசாயின் சாதனையை இவர் முறியடிக்க இருந்தாலும், நாட்டில் அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற இடத்தில் மொரார்ஜி தேசாய்தான் இருக்கிறார். அவர் 8 முழு பட்ஜெட்டுகளையும், 2 இடைக்கால பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு அடுத்து அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவராய் ப.சிதம்பரம் உள்ளார். இவர் 8 முழு பட்ஜெட்டுகளையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்திருக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தலா 5 முழு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளனர்.