சென்னை: பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்க குறைந்த விலை கொண்ட மசூர் பருப்பை வழங்காமல், அதிக விலை கொண்ட கனடியன் மஞ்சள் நிற பருப்பை கொள்முதல் செய்வது ஏன் என்பது குறித்து தமிழக அரசு இரு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவப்பு நிறம் கொண்ட மசூர் பருப்பை குறைந்த விலையில் மாநிலங்கள் பெற்று, பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கலாம் என மத்திய உணவுத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு பொது விநியோக திட்டத்துக்கான இ-டெண்டரில் மசூர் பருப்பை சேர்க்கவில்லை எனக்கூறி பருப்பு மொத்த வியாபாரம் செய்து வரும் தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், ‘மசூர் பருப்பை போல கேசரி பருப்பும் இருப்பதால் மசூர் பருப்பில் கலப்படம் செய்ய வாய்ப்பு இருப்பதாகக்கூறி மசூர் பருப்பை கொள்முதல் செய்யும் அறிவிப்பாணையை தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு திரும்பப்பெற்றது. பின்னர் மசூர் பருப்பின் சத்துக்களை கருத்தில் கொண்டு மீண்டும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கொள்முதல் பட்டியலில் மசூர் பருப்பு சேர்க்கப்பட்டது.
ஆனால் கடந்த பிப்.14 அன்று தமிழக அரசு பிறப்பித்துள்ள இ-டெண்டர் அறிவிப்பில் மீண்டும் மசூர் பருப்பு இடம்பெறவில்லை. இதை எதிர்த்து எங்களது நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எங்களது கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1961-ம் ஆண்டு முதற்கொண்டு தமிழகத்தில் கேசரி பருப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை.
இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கனடியன் மஞ்சள் கலர் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய கடந்த மே மாதம் 27-ம் தேதியன்று தமிழக அரசு டெண்டர் கோரியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கடந்த ஜூன் 13 அன்று கனடியன் மஞ்சள் நிற பருப்பை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு டெண்டர் வழங்கியுள்ளது.
மசூர் பருப்பைக் காட்டிலும் கனடியன் மஞ்சள் நிற பருப்பு விலை அதிகமானது. இதன்மூலம் ரேஷன் கடைகளில் பருப்பை விலைக்கு வாங்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுவர். எனவே, ரேஷன்கடைகளில் முன்பு போல மசூர் பருப்பை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். கனடியன் மஞ்சள் நிற பருப்பை கொள்முதல் செய்ய தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், “கூடுதலாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுத்துள்ளது. அதற்கான காரணத்தை தமிழக அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்தியாவில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மசூர் பருப்பு ஆண்டுக்கு 10 லட்சம் டன் விளைகிறது. விலை குறைந்த இந்த பருப்பை கொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 150 கோடி மிச்சமாகும்” என வாதிட்டார்.
தமிழக அரசின் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மசூர் பருப்பை விட துவரம் பருப்பையே பொதுமக்கள் அதிகமாக விரும்புகின்றனர். அதனால்தான் பொது விநியோக திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே மசூர் பருப்பை டெண்டரில் சேர்க்கவில்லை.அதேசமயம் மசூர் பருப்புக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் மசூர் பருப்பு கொள்முதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலை கொண்ட மசூர் பருப்பை வழங்காமல், அதிக விலை கொண்ட கனடியன் மஞ்சள் நிற பருப்பு எந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.