துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாக சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார். கதாநாயகனான சூரி நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான கருடன் திரைப்படம் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் ‘கருடன்’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இவ்விழாவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய நடிகர் சூரி, கருடன் திரைப்படத்தின் வசூல் குறித்தும் கதாநாயகனாக இருப்பதில் இருக்கும் பிரச்னைகள் குறித்தும் பேசியிருக்கிறார்.
இது குறித்துப் பேசியிருக்கும் சூரி, “ஒரு படத்தை எடுத்துவிடலாம். திரையரங்கிற்குக் கொண்டு வந்துவிடலாம். ஆனால், ஒரு படத்தை இதுபோன்ற ஒரு வெற்றி விழா மேடைக்குக் கொண்டு வருவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்த வெற்றிக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. வெற்றிமாறன் அண்ணன் இல்லையென்றால் நான் இன்று இப்படி ஒரு இடத்திற்கு வந்திருக்க முடியாது. என்னைச் சரியான அடையாளம் கண்டு எனக்கு வாய்ப்பளித்தவர் அவர். ‘விடுதலை’க்கு முன், ‘விடுதலை’க்குப் பின் என்று என் வாழ்வைப் பிரித்துக் கொள்ளலாம். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், இதுதான் உண்மை. நானும், என் குடும்பமும் அவரை என்றென்றும் மறக்க மாட்டோம்.
இப்படம் திரைக்கு வருவதற்கு முந்தைய நாள் பல விநியோகஸ்தர்கள் எனக்குப் போன் செய்து, ‘உங்களை நம்பித்தான் இவ்வளவு பெரியத் தொகையைக் கொடுத்துப் படத்தை வாங்குகிறோம்’ என்று கூறினார்கள். அவர்களுக்கெல்லாம் நம்பிக்கையளித்து, பொறுப்பேற்றுக் கொண்டு ‘இப்படத்தை நம்பிக்கையுடன் வாங்குங்கள். போட்ட பணத்தை எடுத்துவிடலாம்’ என்று அவர்களிடமெல்லாம் கூறினேன். கதாநாயகனாக இருப்பதில் இப்படிப் பல சிக்கல்கள் இருப்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டேன். அதற்கேற்ப ‘கருடன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று என்னைக் காப்பாற்றிவிட்டது. விநியோகஸ்தர்களுக்கும் என் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டது.
நல்ல வசூல்தான், ஆனால் படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற விவரம் எனக்கே சரியாகத் தெரியாது. இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனக்காக, பழக்கத்திற்காக இப்படத்தில் நடித்த சசிகுமார் அண்ணனுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. அவர் இப்படத்தில் வந்த பிறகு, இப்படம் பெரிய படமாக மாறியது. காமெடி நடிகராக அவருடன் நடித்திருக்கிறேன். எங்கும், எப்போதும் அவர் என்னை விட்டுக் கொடுத்ததேயில்லை. நான் எவ்வளவு உயரம் சென்றாலும் என்றும் எனக்கு கதாநாயகன்தான் அவர்” என்று பேசியிருக்கிறார்.