சென்னை: தங்களின் கோரிக்கைகளை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “சுதந்திர இந்தியாவின் 76 ஆண்டுகளில் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்துக்காக போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது என்பது தான் வருத்தமான உண்மை. சென்னை முதல் குமரி வரை ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரையிலான சுகாதாரத் துறையின் கட்டமைப்பு பல மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளதோடு, மக்களுக்கான வரப்பிரசாதமாக உள்ளது.
கரோனா பேரிடரின் போது அது கண்கூடாக தெரிந்தது. இருந்த போதும் அதற்கான பங்களிப்பை தரும் 19 ஆயிரம் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும், சுகாதாரத் துறையின் சாதனைகள் குறித்து அமைச்சர் பெருமையாக பேசுவதுண்டு. ஆனால் அரசு மருத்துவர்களின் நலன்கள் குறித்து மட்டும் இதுவரை ஒருமுறை கூட அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.
மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான நீட் தேர்வு குறித்து தமிழக சட்டப்பேரவையில் பலமுறை விவாதங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்த விஷயத்தில் மட்டும் அரசு மவுனமாகவே உள்ளது. இந்த அரசு விளிம்பு நிலை மக்களுக்கான அரசு என்று முதல்வர் தெரிவிக்கிறார். அதேநேரத்தில் விளிம்பு நிலை மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு நியாயமான சம்பளம் மறுக்கப்படுவது தான் வேதனையாக உள்ளது.
மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் மாத ஊதியத்தை விட ரூ.40 ஆயிரம் இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அரசிடம் நாங்கள் கேட்பது எல்லாம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதனடிப்படையில் அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது தான். ஏற்கெனவே சட்டப்பேரவையில், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி ஊதிய பலன்கள் தரப்பட வேண்டும் என நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசியுள்ளனர். அப்போது துறையின் அமைச்சர் பதில் ஏதும் சொல்லவில்லை.
சட்டசபையில் கலைஞரின் சாதனைகளை அடிக்கடி பெருமையாக பேசுவதை பார்க்கிறோம். ஆனால் அவர் அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்த, இந்த அரசே தடை போடுவது தான் வருத்தமளிக்கிறது.
கரோனா பேரிடரில் பணியாற்றிய போது, தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு கடந்து விட்டது. ஆனால், அரசு இதுவரை கருணை காட்டவில்லை. அதுபோல் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை 6 வாரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசோ கோரிக்கையை நிறைவேற்ற தொடர்ந்து மறுத்து வருவது வருத்தமளிக்கிறது.
வரும் தமிழக சட்டப்பேரவை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின் போது, அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம். கரோனா பேரிடரில் பணியாற்றி, உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு, அரசு வேலை வழங்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.