கரூர்: கரூரில் சார் பதிவாளர் அளித்த நில மோசடி புகார் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர்(பொ) முகமது அப்துல் காதர், நகர காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவர், தனது சொத்தை 4 பேருக்கு கிரயம் செய்து கொடுக்க வந்திருந்தார். அப்போது, சொத்தின் அசல் ஆவணம் தொலைந்துவிட்டதாகக் கூறி, சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை ஆவணதாரர் சார்பாக யுவராஜ், பிரவீன் ஆகியோர் அளித்தனர்.
இந்நிலையில், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்டதாக கூறப்படும் சான்றிதழ் போலியானது என்று ஷோபனாவின் தந்தை பிரகாஷ் புகார் தெரிவித்தார். இதையடுத்து, யுவராஜ், பிரவீன் ஆகியோர் எனது அலுவலகத்துக்கு வந்து, அரசியல் அதிகாரம் மிக்க நபருக்காக இந்த நிலம் பதிவு செய்யப்பட்டது எனவும், கிரயம் செய்த பத்திரத்தை ஒப்படைக்கவில்லை என்றால், வேலைக்கும், உயிருக்கும் பாதுகாப்பு கிடையாது என்றும் கூறிமிரட்டினர். எனவே, எனது உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் பதிவாளர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக யுவராஜ், பிரவீன் உட்பட 7 பேர் மீது கரூர்நகர போலீஸார் கடந்த 9-ம் தேதிவழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி, நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர்: மேலும், இந்த நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஷோபனாவின் தந்தை பிரகாஷ் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, சார் பதிவாளர் அளித்த புகாரில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்ஜாமீன் கேட்டு கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12-ம்தேதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், வழக்கு விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதன்படி, இந்தவழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.