கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ கொடுத்துள்ள சிறப்பு அனுமதி! இனி எல்லாமே இவர் கையில் தான்!

தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 2024 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் ஓய்வு பெற உள்ளார்.  ராகுல் ட்ராவிட்டிற்கு பிறகு அடுத்த தலைமை பயிற்சியாளராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வந்தது. சில வெளிநாட்டு பயிற்சியாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இறுதியாக கவுதம் கம்பீர் தேர்வாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியானது. 2024 டி20 உலக கோப்பையில் இந்தியாவின் செயல்திறனை பொறுத்து புதிய பயிற்சியாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. கவுதம் கம்பீர் ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு மெண்டாராக இருந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று பிசிசிஐ கம்பீரை இந்திய தலைமைப் பயிற்சியாளராக உறுதிப்படுத்தியது என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மம்ப்ரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் ஆகியோர் உள்ளனர். இவர்களை தேர்வு செய்யும் உரிமையை தன்னிடம் வழங்க வேண்டும் என்று கம்பீர் பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. 2021ம் இந்திய தலைமை பயிற்சியாளராக டிராவிட் பொறுப்பேற்றபோது, ​​விக்ரம் ரத்தோரை பேட்டிங் பயிற்சியாளராகத் தக்க வைத்துக் கொண்டார். மற்ற இருவரும் மாற்றப்பட்டனர். 

GAUTAM GAMBHIR WILL BE ANNOUNCED AS THE INDIAN HEAD COACH BY END OF THIS MONTH. [Abhishek Tripathi From Dainak Jagran] pic.twitter.com/Ic9SG0erjn

— Johns. (@CricCrazyJohns) June 16, 2024

பயிற்சியாளராக கவுதம் கம்பீர்

ஒரு வீரராக அதிக அனுபவம் இருந்தாலும், பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு அதிக அனுபவம் இல்லை. ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு மெண்டாராக இருந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் லக்னோ அணியுடன் பணியாற்றியுள்ளார். இந்த இரண்டு வருடமும் லக்னோ அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற்றது. நடந்து முடிந்த ஐபிஎல் 2024ல் கொல்கத்தா அணியில் இணைந்து செயல்பட்டார். கம்பீர் அணிக்கு வந்தவுடன் 10 வருடங்களுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. லக்னோ அணி பிளே ஆப்க்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார். கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த முறை எம்பி தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. கடந்த முறை பாஜக சார்பில் டெல்லி பகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். கம்பீர் அணிக்குள் வந்தவுடன் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்மில் இல்லாத வீரர்கள் ஓரம்கட்டப்படுவார்கள் என்றும், டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளுக்கு தனி தனி அணிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.