ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஆந்திர முன்னாள்முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன்பு இருந்த அவரது சில ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அப்புறப்படுத்தினர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ‘லோட்டஸ் பாண்ட்’ (தாமரை தடாகம்) எனும் பெயரில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமாக மிகப்பெரிய மாளிகை உள்ளது.
இங்கு பாதுகாவலர்கள் தங்குவதற்காக ஷெட்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது கடந்த சந்திரசேகர ராவின் ஆட்சியில் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்தது.
புகார் மீது நடவடிக்கை: தற்போது இவை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பலர் புகார் செய்ததால், இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்து, ஊழியர்களின் உதவியால் இடித்துஅப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து கேட்டதற்கு, இதில்அரசியல் ஏதும் இல்லை என்றும், மக்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளன எனவும் ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.