ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டுக்கு அருகேயுள்ள வேப்பூர் இஸ்திமா நகரைச் சேர்ந்தவர் முகமது இக்பால். பழைய இரும்பு பொருள்கள் விற்பனைச் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் இருக்கின்றனர். மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. மூத்த மகன் வெளியூரில் தங்கியிருந்தார். இதனால், தனது மனைவி மற்றும் இளைய மகன் இம்ரானுடன் வசித்து வந்தார் முகமது இக்பால். இவரது மனைவி ஓர்நாள் திடீரென இறந்துவிட்டார். தாயின் மறைவுக்குப் பிறகு வேலைக்குச் செல்லாமல் மன குழப்பத்திலேயே இருந்திருக்கிறார் இம்ரான்.

இதனால், தந்தை – மகன் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி, தந்தை முகமது இக்பாலை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலைச் செய்திருக்கிறார் மகன் இம்ரான். ஆற்காடு நகரப் போலீஸார் புலன் விசாரணை மேற்கொண்டு இம்ரானை கைதுசெய்தனர். ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில், ஜூன் 15-ம் தேதியான நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. தந்தையை கொன்ற மகன் இம்ரானுக்கு `ஆயுள்’ தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, இம்ரான் சிறையிலடைக்கப்பட்டார்.