சென்னை: சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு வரும் 20-ம் தேதி வரவிருந்த நிலையில், அவரின் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, சென்னைக்கு முதல் முறையாக வரும் 20-ம் தேதி வருகை தர இருந்தார். சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திவந்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை பயணம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்படுவதாவது: “பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னைக்கு வருகை தந்து, ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்க இருந்தார்.
இதைத்தொடர்ந்து, பேசின்பாலம் யார்டில் வந்தே பாரத் ரயில் பராமரிப்புக்காக, பணிமனையை அமைக்க அடிக்கல் நாட்டுதல், ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம் – திருநெல்வேலி இடையே நிறைவடைந்த இரட்டைப்பாதை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி இடையே முடிக்கப்பட்ட இரட்டைப்பாதை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல் போன்றவற்றை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் தொடங்கி வைக்க இருந்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக கூட்டம் நடைபெற்றுவந்தது. இதற்கிடையில், நிர்வாக காரணங்களுக்காக, பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி பின்னர் நடைபெறும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.