மைத்தேயி இனத்தவரின் 2 வீடுகளுக்கு தீவைத்த கும்பல்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் தொடர்ந்து கலவரச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மைத்தேயி இனத்தைச் சேர்ந்த 2 நபர்களின் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்துள்ளது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் தலையை வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி இனத்தவர்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்து வருகிறது.

மைத்தேயிகளுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சுகின்றனர். இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது.

மணிப்பூரில் நடைபெற்ற இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர் வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஓராண்டாகியும் அங்கு இன் னும் கலவரம் ஓயவில்லை. இதுவரை வன்முறைச் சம்பவங்களில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கி உள்ளனர்.

70-க்கும் மேற்பட்ட வீடுகள்.. இந்நிலையில் ஜிரிபாம் மாவட்டம் புதாங்கல் பகுதியில் உள்ள மைத்தேயி இனத்தைச் சேர்ந்த 2 நபர்களின் வீடுகளுக்கு நேற்று முன்
தினம் அதிகாலை ஒரு கும்பல் தீவைத்துள்ளது. அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லை. இந்தத் தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இந்த சம்பவத்தில் 70-க்கும்மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாயின.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜிரிபாம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

ஒருவர் வெட்டிக் கொலை: வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தீ வைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் புதாங்கல் பகுதியை உள்ளடக்கிய போரோபெக்கேரா போலீஸ் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி காணாமல் போன ஒருவர் அங்கு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அந்த உடலில் இருந்து தலை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கூடுதல் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. மணிப்பூர் போலீஸார், மத்திய பாதுகாப்புப் படையினர், துணை ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை மணிப்பூரில் கொண்டாடப்பட உள்ளது. தற்போதுள்ள பதற்றமான நிலை காரணமாக, பக்ரீத் விழா நிகழ்ச்சிகளை பெரிய அளவில் கொண்டாட வேண்டாம் என்று அகில ஜிரிபாம் முஸ்லிம் வெல்பேர் சொசைட்டி (ஏஜேஎம்டபிள்யூஎஸ்) அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.