Doctor Vikatan: எலுமிச்சைப் பழமும் நெல்லிக்காயும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்குமா?

Doctor Vikatan: எனக்கு வயது 40. அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறது. நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதது போல உணர்கிறேன். வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார்களே… அது உண்மையா? இன்ஃபெக்ஷனே வராமல் வாழ்வது சாத்தியமே இல்லையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் 

மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, சரியான நேரத்துக்குத் தூங்குவது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழப் பழகுவது, ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் உள்ள காய்கறிகள், பழங்கள் என  சரியான உணவுகளைச் சாப்பிடுவது, வெளி உணவுகளைத் தவிர்ப்பது, குறிப்பாக ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதைத் தவிர்ப்பது, புகை மற்றும் மதுப்பழக்கங்களைத் தவிர்ப்பது போன்றவற்றைப் பின்பற்றினாலே ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் சிறப்பாக இருக்கும். 

எலுமிச்சைப்பழம், நெல்லிக்காய் சாப்பிடுவதோ, மஞ்சள்தூள் சேர்த்த பால் குடிப்பதோ நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்பது போன்ற நம்பிக்கைகளும் நம்மிடம் உள்ளன. இவை பொதுவாகச் சொல்லப்படுகிற அறிவுரைகள். இப்படி எந்த உணவும் எந்தக் கிருமியையும் எதிர்த்துப் போராடப் போவதில்லை. ஒட்டுமொத்தமாக நம் ஆரோக்கியத்தைச் சிறப்பாக வைத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றலும் நிச்சயம் மேம்படும். எதிர்ப்புசக்தி என்பது நம் உடலில் நம்முடனேயே இருப்பது. 

பொதுவாக வைட்டமின் சிக்கு ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து, எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் தன்மை உண்டு.  அந்த வகையில் உணவில் வைட்டமின் சி சத்துள்ள நெல்லிக்காய், எலுமிச்சைப் பழம் போன்ற காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொண்டாலே போதும். தனியே வைட்டமின் சியை சப்ளிமென்ட்டாக அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.

இன்ஃபெக்ஷன்

கிருமித்தொற்றே ஏற்படக்கூடாது, குறிப்பிட்ட கிருமித்தொற்றை ஒழிக்க வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் ஒரே வழி. இன்ஃபெக்ஷன் வந்த பிறகு செய்வது சிகிச்சை. தடுப்பூசி என்பது தடுப்புமுறை. அதாவது, நோய் வந்த பிறகு, அந்தக் கிருமியால் உடல் பாதிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றக் கொடுக்கப்படுவது சிகிச்சை.  நம் எல்லோருக்குமே பிறக்கும்போதே ஓரளவு எதிர்ப்பு சக்தி இருக்கும். பிறகு வளர, வளர, சூழலுக்கு எக்ஸ்போஸ் ஆகும்போது அந்த எதிர்ப்பு சக்தி இன்னும் அதிகரிக்கும். தடுப்பூசி போடுவதால் எதிர்ப்பு சக்தி வருவதைப் போலவே, இன்ஃபெக்ஷன் ஏற்படுவதாலும் எதிர்ப்பு சக்தி வரும்.

உதாரணத்துக்கு, அம்மை நோய். ஒருமுறை அம்மைத் தொற்று வந்தாலே, உடலில் எதிர்ப்பு சக்தி வந்துவிடும். மீண்டும், மீண்டும் அந்த நோய் தாக்காது. அதுவே, இன்ஃப்ளுயென்ஸா போன்ற சிலவகை தொற்றுகள், அவற்றுக்கு காரணமான கிருமிகள் அடிக்கடி திரிபடைவதால், மீண்டும் மீண்டும் பாதிக்கும். அந்தத் திரிபுக்கேற்ப தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டும். இன்ஃபெக்ஷனே இல்லாமல் ஒரு மனிதரால் வாழவே முடியாது. நம் உடலில் உள்ள செல்களைவிட, கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் கிருமிகள் இருக்கும்.

நாம் உயிருடன் இருக்க நினைப்பதைப் போலவே, கிருமிகளும் உயிர் வாழ போராடும். எனவே, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு குணமாவதன் மூலமும் எதிர்ப்பு சக்தி வரும். இன்ஃபெக்ஷன் இருக்கும்போது தற்காலிகமாக குறைகிற எதிர்ப்பு சக்தி, மெள்ள, மெள்ள அதிகரிக்கவும் செய்யும்.

உடற்பயிற்சி

முறையாக உடற்பயிற்சி செய்வோருக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படுவதும், அப்படியே ஏற்பட்டாலும் அதிலிருந்து மீள்வதும் குறைவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதன் மூலம் இறப்பு விகிதமும் குறைவதாகச் சொல்லப்படுவதால், நோய் எதிர்ப்பாற்றலைச் சிறப்பாக வைத்துக்கொள்ள விரும்புவோர், உடற்பயிற்சி செய்வதை வாழ்வியல்முறையாகப் பின்பற்ற வேண்டியது அவசியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.