புதுடெல்லி: மக்களவையின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) – தெலுங்கு தேசம் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. மக்களவை தலைவர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்துவது குறித்து இண்டியா கூட்டணி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மக்களவை தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசத்தின் 16எம்.பி.க்கள், ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்.பி.க்கள் ஆதரவுடன் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 24-ம் தேதி தொடங்குகிறது. மக்களவை தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறும்போது, ‘‘பாஜக சார்பில் பரிந்துரை செய்யப்படும் நபரை மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்க நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்’’ என்றார்.
அதேநேரம், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்பட்டாபிராம் கொம்மரெட்டி கூறியபோது, ‘‘மக்களவை தலைவர் பதவி தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் முதலில் கலந்துபேச வேண்டும். இதில் கருத்தொற்றுமை ஏற்பட்டு,அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபருக்கே தெலுங்கு தேசம் ஆதரவு அளிக்கும்’’ என்றார்.
புதிய மக்களவை தலைவரை தேர்வு செய்வதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதான கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் – தெலுங்கு தேசம் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:
18-வது மக்களவை கூடியதும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பார்கள். மூத்த எம்.பி. ஒருவர் தற்காலிக தலைவராக பதவியேற்று, புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மத்திய பிரதேசத்தின் பாஜகஎம்.பி. வீரேந்திர குமார், கேரளாவின்காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் ஆகிய இருவரும் 7 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில், வீரேந்திர குமார்மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார். எனவே, கொடிக்குன்னில் சுரேஷ்தற்காலிக தலைவராக இருந்து, புதியஎம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம்செய்து வைக்க வாய்ப்பு உள்ளது.
மக்களவை தலைவராக ஓம் பிர்லாவை மீண்டும் நியமிக்க பாஜக தலைமை விரும்புகிறது. ஆனால், இந்த பதவியை தெலுங்கு தேசமும் கோரி வருகிறது. அந்த கட்சியை சமாதானப்படுத்த ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரியை மக்களவையின் தலைவர் அல்லது துணைதலைவராக நியமிக்க பாஜக தலைமைதிட்டமிட்டுள்ளது. இவர், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி.ராமராவின் மகள் மற்றும் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை மரபின்படி, துணை தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த வகையில், மக்களவை துணை தலைவர் பதவியை பெற இண்டியா கூட்டணிஆர்வம் காட்டி வருகிறது. ஒருவேளை,துணை தலைவர் பதவி மறுக்கப்பட்டால், மக்களவை தலைவர் பதவிக்கு இண்டியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.