வாஷிங்டன்: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா என்ற இந்தியர் செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றம் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். செக் குடியரசின் பராக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிகில் குப்தா அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நிகில் குப்தா இன்று (திங்கள்கிழமை) அமெரிக்காவின் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
முன்னதாக, நிகில் மீதான குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க அரசின் வழக்கறிஞர்கள் கூறுகையில், “நிகில் குப்தாவும் சிசி 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய அரசு அதிகாரியும் 2023 மே மாதம் முதல் தொலைபேசி வழியாகவும், மின்னணு தொடர்பு மூலமாகவும் பல முறை தகவல்கள் பரிமாறியுள்ளனர்.
அப்போது சிசி1 கொலைக்கு திட்டமிடுமாறு நிகில் குப்தாவிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலாக குப்தா மீது இந்தியாவில் உள்ள கிரிமினல் வழக்கு திரும்பப் பெறப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சிசி1-ன் உத்தரவின் படி, குற்றச்செயல்களில் தொடர்பு என தான் நம்பிய ஒருவரை பன்னுனைக் கொலைச் செய்வதற்காக நிகில் குப்தா அமர்த்தியுள்ளார். ஆனால், அவரால் நியமிக்கப்பட்டவர் அமெரிக்காவின் போதைத் தடுப்பு அமைப்பின் ரகசிய தகவலாளி” என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
கொலை செய்வதற்காக ஒருவரை ஏற்பாடு செய்த சதி நிரூபிக்கப்பட்டால் நிகில் குப்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.