புதுச்சேரி: இலாகா இல்லாத அமைச்சராக 3 மாதங்களாக திருமுருகன் தொடர்ந்து வருகிறார். இச்சூழலில் அமைச்சர் பதவி தங்களுக்கு தேவை என பாஜக எம்.எல்.ஏ.க்கள் கோரியுள்ளனர். இதனால் புதுச்சேரியில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுவை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரேயொரு பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 5 மாதங்களாக புதிய அமைச்சர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கிய சூழலில் கடந்த மார்ச் மாதம் காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து திருமுருகன் கடந்த மார்ச் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அப்போதைய ஆளுநர் தமிழிசை பதவிப் பிராணம் செய்து வைத்தார். வழக்கமாக அமைச்சர் பதவியேற்பு முடிந்ததும், அவருக்கான இலாகா ஒதுக்கப்பட்டு விடும். ஆனால், திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. மார்ச் 16-ம் தேதி மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானது. அதனால் அமைச்சர் திருமுருகன் துறைகள் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக பேச்சு எழுந்தது.
“தேர்தல் ஆணையத்திடம் அமைச்சர் இலாக்கா விவரங்களை தெரிவித்து ஒப்புதல் பெற்று ஒதுக்குவதில் தடையில்லை” என்று தேர்தல் துறை தரப்பில் தெரிவித்தனர். ஆனால் இலாகா இல்லாத அமைச்சராக திருமுருகன் கடந்த 3 மாதங்களாக உலா வருகிறார். தேர்தல் முடிவு கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து நன்னடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாகியும் இதுவரை இலாகா அவருக்கு ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் பதவி கோரும் பாஜக எம்எல்ஏக்கள்: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இதனால், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. ஆட்சி அமைந்தது முதலே நிர்வாக பதவியில் இல்லாத ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், மூன்று ஆண்டு ஆட்சி நிறைவுற்ற நிலையிலும் இதுவரை வாரியத் தலைவர் பதவி வழங்கப்படவில்லை. அதோடு, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட தங்கள் தொகுதிகளுக்கு தரப்படவில்லை என்று பாஜக எம்எல்ஏக்கள் குமுறலில் உள்ளனர்.
இத்தகையச் சூழலில் மக்களவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்தும் தோல்வி அடைந்ததால் கூட்டணியில் மேலும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமீபத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு பாஜக எம்எல்ஏக்கள் ஒன்று கூடி பேசினர். அதையடுத்து மாநிலங்களவை எம்பியும் மாநிலத்தலைவருமான செல்வகணபதியிடம், தங்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தரவேண்டும் – வாரியத் தலைவர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இல்லாவிட்டால் சட்டப்பேரவையில் ஆளும் அரசுக்கு எதிராக பேசும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இச்சூழலில் ரெஸ்டோ பாரை மூடுமாறு ஆளுநரிடம் பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார் மனு தந்துள்ளார். கலால் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வரை சந்திக்காமல் ஆளுநரை சந்தித்தது கூட்டணியில் பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, “பாஜகவில் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தொடர்பாக அக்கட்சி தலைமை தேசிய ஜனநாயக்கூட்டணி தலைவரான முதல்வர் ரங்கசாமியிடம் இதுவரை பேசவில்லை. புதிய அமைச்சரான திருமுருகனுக்கும் துறைகளை ஒதுக்குவதிலும் அவர் முடிவு எடுக்கவில்லை. யார் என்ன கூறினாலும் இறுதி முடிவை முதல்வர்தான் எடுப்பார் என்பதால் எம்எல்ஏக்கள் தங்கள் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டத் துவங்கியுள்ளனர்” என்றனர்.