மலாவி முன்னாள் துணை ஜனாதிபதி இறுதி ஊர்வலத்திற்குள் பாய்ந்த வாகனம்.. கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் பலி

லிலாங்வே:

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா, கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல், நிட்செயு மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான நிசிபி கிராமத்திற்கு நேற்று ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வழிநெடுக அவரது கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். இன்று அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

முன்னதாக, துணை ஜனாதிபதியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் வழியில், ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு வாகனம் திடீரென மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. நிட்செயு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஊர்வலத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. கட்டுக்கடங்காத கூட்டத்திலிருந்து விலகிச் செல்ல முயன்றபோது அந்த வாகனம், மக்கள் மீது மோதியதாக தெரிகிறது.

மறைந்த துணை ஜனாதிபதி லிமாவின் கட்சியான யு.டி.எம். கட்சியின் செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் கூறுகையில், “ஊர்வலத்தின்போது ஒரு சில இடங்களில் திரண்டிருந்த மக்கள், துணை ஜனாதிபதியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலத்தை நிறுத்தும்படி கூறியதால் பதற்றம் உருவானது. டெட்ஸா பகுதியில், மக்கள் சாலையை மறித்தனர். ஊர்வலத்தை நிறுத்தியபிறகே அவர்கள் அமைதி அடைந்தனர். அவர்கள் அஞ்சலி செலுத்தியபிறகு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. கட்சியினர் அமைதி காக்கவேண்டும்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.