மும்பை யோகா பயிற்சி நிகழ்ச்சியில் உலகின் மிக வயதான சுவாமி சிவானந்தா பங்கேற்பு

மும்பை: மும்பையில் நடந்த யோகா பயிற்சி நிகழ்ச்சியில் உலகிலேயே மிகவும் வயதான சுவாமி சிவானந்தா (127) பங்கேற்று சில ஆசனங்களை செய்துகாட்டினார்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐ.நா.சபை அறிவித்தது. இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இதன்படி, வரும் 21-ம் தேதி10-வது சர்வதேச யோகா தினம்கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஷ்லோகா ஜோஷிஅறக்கட்டளை சார்பில் பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு யோகா பயிற்சிகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பத்மஸ்ரீ சுவாமி சிவானந்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, யோகா பயிற்சிகளை செய்து காட்டினார். 127 வயதான இவர், உலகிலேயே மிகவும் வயதானவராக கருதப்படுகிறார். உத்தர பிரதேசத்தின் வாராணசியைச் சேர்ந்த இவர், தினமும் யோகா பயிற்சி செய்து வருகிறார். எளிமையான வாழ்வியல் முறையை கடைபிடித்து வரும் இவர், தன்னலமற்ற சேவை செய்து வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் பாலிவுட் திரைப்பட இயக்குநர் சுபாஷ் கய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யோகா செயல்விளக்கங்களைத் தொடர்ந்து, யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் தொடர்பாக சிறப்பு விருந்தினர்களுடன் குழு விவாதம் நடத்தப்பட்டது.

இதனிடையே, பிரதமர் மோடி யோகா பயிற்சிகள் தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், யோகா பயிற்சியை வாழ்வின் ஒரு அங்கமாக கருத வேண்டும். மற்றவர்களையும் யோகா பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.