Doctor Vikatan: நான் 7 மாத கர்ப்பமாக உள்ளேன். எனக்கு இது முதல் கர்ப்பம். கடந்த சில மாதங்களில் வித்தியாசமான அறிகுறிகளை உணர்கிறேன். அவற்றை வெளியே சொல்லவும் கூச்சமாக இருக்கிறது. அடிக்கடி எனக்கு வாயு வெளியேறுகிறது. கர்ப்பத்துக்கு முன் நான் இப்படி உணர்ந்ததில்லை. வேலைக்குச் செல்லும் இடத்தில் இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல சிறுநீர்க் கசிவும் இருக்கிறது. தும்மும்போது, இருமும்போது சிறுநீர் கசிகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு என்ன காரணம்… தீர்வுகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயராணி
கர்ப்ப காலத்தின் போது அதிகளவில் வாயு வெளியேறுவதை சில பெண்கள் உணர்வதுண்டு. கர்ப்ப காலத்தில் தலைமுதல் பாதம் வரை உடலின் அனைத்து பாகங்களுமே ஹார்மோன் மாறுதலுக்குள்ளாகின்றன. இரைப்பை மற்றும் குடல் பகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் விளைவுதான் இந்த அதீத வாயு வெளியேற்றம் ஏற்படுகிறது. கர்ப்பத்தின் போது தசைகளைக் கட்டுப்படுத்தும் திறன் உங்களுக்குக் குறைவாக இருக்கும்.
உங்களுடைய இந்தப் பிரச்னைக்கு உடற்பயிற்சிகள் உதவும். மிதமான உடற்பயிற்சிகள், இரைப்பை மற்றும் குடல் பாதையின் இயக்கத்தை சீராக்கி, உணவு செரிமானம் ஆவதை எளிதாக்கும். வாயு வெளியேற்றத்துக்கு பயந்துகொண்டு கடுமையான பயிற்சிகளைச் செய்ய வேண்டாம். உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மிதமான பயிற்சிகளை மேற்கொண்டால் போதுமானது. சிலவகை உணவுகள் வாயுத்தொல்லையை அதிகப்படுத்துபவை என்பதால் அவற்றைத் தவிர்ப்பதும் இந்தப் பிரச்னைக்கான தீர்வாக அமையும். உதாரணத்துக்கு, கார்பனேட்டடு பானங்கள், பீன்ஸ், புரொக்கோலி, காலிஃபிளவர் போன்றவை.
அளவுக்கதிகமான பால் பொருள்களும் வாயுத் தொல்லையை அதிகப்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் நிறைய பால் குடிப்பது அவசியம் என்று அடிக்கடி பால் குடிப்பார்கள். கால்சியம் தேவைக்கு பால் குடிப்பவர்கள், பாலைவிடவும் அதிக கால்சியம் உள்ள உணவுகளைத் தெரிந்துகொண்டு எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் இருமும்போதும், தும்மும்போதும் சிறுநீர் கசிவதை உணர்வதும் சகஜமானதுதான். ஒன்றிரண்டு சொட்டு சிறுநீர் வெளியேறினாலும் அது தரும் பதற்றம், சம்பந்தப்பட்ட பெண்களை மன அழுத்தத்தில் தள்ளும். வேலைக்குச் செல்கிற பெண்களாக இருந்தால் இது இன்னும் சங்கடமானது. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட பேன்ட்டி லைனர் உபயோகிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பதால், அதன் அழுத்தம் தாங்காமல் ஏற்படுகிற இந்தப் பிரச்னை தற்காலிகமானதுதான் என்பதால் பயம் வேண்டாம். அடிக்கடி சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். சிறுநீர்ப்பை முழுவதுமாக நிரம்பும் வரை காத்திருக்காமல் அவ்வப்போது சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொளுங்கள். சிறுநீர்க் கசிவுக்கு பயந்துகொண்டு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்காதீர்கள். அது உடலில் நீர்வறட்சியை ஏற்படுத்தி வேறு பாதிப்புகளுக்கு காரணமாகிவிடும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.