வெள்ளித்திரையில் மக்களிடையே பழக்கப்பட்ட முகம் `காதல்’ சரண்யா. இவர் சமீபத்தில் திருத்தணி முருகன் கோயிலில் மொட்டையடித்து முடிக் காணிக்கை கொடுத்ததுடன் அலகும் குத்திக் கொண்டார். அந்த வீடியோக்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரண்யா பகிர்ந்திருந்தார். அவரிடம் இது தொடர்பாகப் பேசினோம்.
“நான் 2019-லிருந்துதான் திருத்தணிக்குப் போறேன். விகடனில் ஒருமுறை நடிகர் யோகிபாபு கொடுத்திருந்த பேட்டியில், `படம் இல்லாம வாழ்க்கையில் அடுத்து என்ன பண்றதுன்னே தெரியாம இருந்தப்ப திருத்தணி முருகன் கோயிலில் படுத்திருந்தேன். அப்ப தான் `யாமிருக்க பயமேன்’ பட வாய்ப்பு கிடைச்சது. அப்ப எனக்கு அது சின்ன வாய்ப்பாகத்தான் தெரிஞ்சது. ஆனா, அந்தப் படத்துக்குப் பிறகு என் கரியரே மாறிடுச்சு’னு சொல்லி இருப்பார். சினிமாக்காரருடைய வாழ்க்கை அந்தக் கோயிலுக்குப் போய் மாறியிருக்குன்னா நம்ம வாழ்க்கையிலும் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திடாதான்னுதான் திருத்தணிக்குப் புறப்பட்டேன். 75 ரூபாய் பஸ்ல டிக்கெட் எடுத்து முருகரை தரிசனம் பண்ணிட்டு வந்தேன். போயிட்டு வந்த உடனே மாற்றம் நிகழ்ந்துச்சான்னா இல்ல… ஆனா, அவரை நான் வழிபட வழிபட என் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை என்னால உணர முடிஞ்சது.
என்னோட குரு பரஞ்சோதி பாபா. அவருடைய வழிகாட்டுதலில்தான் எனக்கு திருத்தணி முருகன் அறிமுகமானார். ஏதாவது ஒரு இடத்துக்கு போகும்போது நாம ஏற்கெனவே இந்த இடத்தில் வாழ்ந்த மாதிரியான ஒரு உணர்வு வரும். அப்படித்தான் திருத்தணிக்குப் போகும் போதெல்லாம் எனக்கு வரும். காலங்காலமா நிறைய வழிபாட்டு முறைகள் இருக்கு. கோயிலில் முடி கொடுக்கிறதை அவங்க நல்ல விஷயத்துக்குத்தான் பயன்படுத்துறாங்க. அலகு குத்திக்கிறதுங்கிறது ஒருவித மன தைரியம்தான். எனக்கு இதைப் பண்ணனும்னு தோணுச்சு. கடவுள் சொன்னாரானு கேட்டா அவர் அன்பைத்தவிர எதையும் கேட்டதில்லை. அவர் எனக்கு நிறைய விஷயங்கள் பண்றார். எனக்கு உன்னைத்தவிர எதுவும் வேண்டாம். நீ என் கூடவே இரு எல்லா சூழ்நிலையிலும்னு வேண்டிக்கிட்டு என் முருகனுக்காக நான் பண்ணினேன். அவ்ளோதான்!
திருத்தணி குருக்கள் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி 11 நாள் விரதம் இருக்க முடிவெடுத்தேன். ஆனா, 29 நாள்கள் தானாகவே நீண்டு போயிருச்சு. திருத்தணி கோயில் பிரகாரத்தில் தங்கி அங்கேயே பொது கழிப்பறையைப் பயன்படுத்தி குளிச்சிட்டு, விடியற்காலையில் 4 மணிக்கெல்லாம் அலகு குத்திக்கிட்டேன். மொட்டை போட்டு அலகு குத்தின வீடியோவை அப்லோட் பண்றதுக்குக் கொஞ்சம் தயங்கினேன். ரொம்ப யோசிச்சுதான் அந்த வீடியோவை போட்டேன். 30% நெகட்டிவிட்டி இருந்தாலும் 70% பாசிட்டிவ் ஆக ஆன்மிகத்தினால் கனெக்ட் ஆகித்தான் பலர் அந்தப் பதிவை பார்த்தாங்க. நம்ம வாழ்க்கையில் எதுவும் நிலையானது இல்ல. அழகும் நிலையானது கிடையாது. பெண்கள் பல விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எல்லாத்தையும் எதிர்கொண்டு கடந்து வந்திடலாம் என்கிற நம்பிக்கையை இது கொடுத்திருக்கு.
என் வாழ்க்கையில் நிறைய இருண்ட பக்கங்கள்தான் இருந்திருக்கு. எனக்கு புது வாழ்வு தேவைப்பட்டுச்சு. இப்ப ஏதோ நான் புதுசா பொறந்த மாதிரி உணர்றேன்!” என்றார் நெகிழ்ச்சியுடன்.