உ.பி.யில் 10 தொகுதிகளில் பேரவை இடைத்தேர்தல்: அகிலேஷ் – ராகுல் கூட்டணி மீண்டும் இணையுமா?

புதுடெல்லி: எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் மக்களவைக்கு தேர்வானதால் உத்தரப் பிரதேசத்தின் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதிலும், அகிலேஷ் யாதவ் – ராகுல் காந்தி ஜோடி ஒன்றிணையுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகளால் அனைவரது பார்வையும் உத்தரப்பிரதேசம் மீது திரும்பியுள்ளன. மக்களவைக்கு தேர்வான 10 எம்பிக்களால் அவர்கள் எம்எல்ஏவாக இருந்த சட்டப்பேரவை தொகுதிகள் காலியாகிவிட்டன. இதில் சிஷாமாவ் தொகுதி எம்எல்ஏவான இர்பான் சோலங்கி, ஒரு வழக்கில் ஏழு வருட தண்டணை பெற்றதால் அந்த தொகுதிக்கு இடைதேர்தல் நடைபெற உள்ளது. உபி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமாஜ்வாதியின் அகிலேஷ், கர்ஹாலின் எம்எல்ஏவாக இருந்தார். இவர், மக்களவை தேர்தலில் கன்னோஜ் தொகுதி எம்பியாகி விட்டார். இதர எட்டு சட்டப்பேரவை தொகுதிகளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக்களுக்கானவை.

எனவே, விரைவில் நடைபெறவிருக்கும் இந்த 10 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான கடும் போட்டி காரணம்.

உத்தரப் பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இணைந்து 43 தொகுதிகள் பெற்றன. கடந்த இரண்டு தேர்தலிலும் பெற்றதை விடக் குறைவாக, என்டிஏவிற்கு 36 தொகுதிகள் கிடைத்தன. இதன் பின்னணியில் சமாஜ்வாதியின் அகிலேஷ் மற்றும் காங்கிரஸின் ராகுல் காந்தி ஜோடியின் தீவிரப் பிரச்சாரம் காரணமாகக் கருதப்படுகிறது. இந்த வெற்றி ஜோடி வரும் இடைத்தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே ஒரே வேட்பாளராக இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தார். இதில் அவர் உ.பியின் ரேபரேலியை தக்க வைத்து, கேரளாவின் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ராகுலின் இந்த நடவடிக்கையும் காங்கிரஸுக்கு உபியில் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், அகிலேஷின் கர்ஹால் தொகுதியில் அவரது குடும்ப உறுப்பினரான தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட உள்ளார்.

மேலும், மக்களவை தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்றது போல், இந்த இடைத்தேர்தலிலும் அகிலேஷ் – ராகுல் ஜோடி பெற முயல்கிறது. இதனால், அகிலேஷ் – ராகுல் ஜோடி உபியில் இடைத்தேர்தலுடன் அதன் 2027 சட்டப்பேரவை போட்டியிலும் தொடரும் எனக் கருதப்படுகிறது. இந்த கூட்டணியுடன் சேர உபியின் முன்னாள் முதல்வரான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், தன் முடிவை மாயாவதி இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், உபியின் 10 தொகுதி இடைத்தேர்தலில் கடும் போட்டி இருக்கும் நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக, அயோத்யாவின் மில்கிபூர் சட்டப்பேரவை தொகுதியை சமாஜ்வாதியிடமிருந்து கைப்பற்ற பாஜக தீவிரம் காட்ட உள்ளது. ஏனெனில், மக்களவை தேர்தலில் மில்கிபூர், அயோத்யா உள்ளிட்டவை அடங்கிய பைஸாபாத்தில் பாஜக தோல்வி பெற்றது. நான்குமுறை எம்பியாக இருந்த பாஜகவின் லல்லுசிங், சமாஜ்வாதியின் மில்கிபூர் எம்எல்ஏவான அவ்தேஷ் பிரசாத்திடம் தோல்வி அடைந்திருந்தார்.

ராமர் கோயில் திறப்பிற்கு பின் பாஜகவின் இந்த தோல்வி, நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்களவை தேர்தலில் உபியின் யாதவ் அல்லாதவர் உள்ளிட்ட ஒபிசி பிரிவினர் வாக்குகள் சமாஜ்வாதி, காங்கிரஸுக்கு ஆதரவாக திரும்பின. இந்தநிலை நீடித்தால் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து மூன்றாம்முறை ஆட்சி அமைப்பது சிக்கலாகும். இதனால், உபியின் 10 தொகுதிகளின் இடைத்தேர்தல், 2027 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு முன்னோடியாக அமைய உள்ளது.

எனவேதான், மக்களவை தேர்தலை சந்தித்தது போல் கூட்டணி அமைக்க அகிலேஷும், ராகுலும் திட்டமிடுகின்றனர். தனக்காக சில தொகுதிகளை ஒதுக்கக் காங்கிரஸ் வாய்ப்பு கோரும் என தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.