சூர்யகுமார் யாதவ் கேப்டன்! விராட், ரோஹித் இனி இல்லை! கம்பீர் அதிரடி முடிவு!

India tour of Zimbabwe: 2024 டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 8 போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அணியில் பல புது முகங்கள் இடம் பெற உள்ளனர். மேலும் இந்திய அணி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 6 ஆம் தேதி தொடங்குகிறது. பிறகு ஜூலை 7, ஜூலை 10, ஜூலை 13 மற்றும் ஜூலை 14 ஆகிய தேதிகளில் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும். 

ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அணியில் உள்ள சீனியர் வீரர்கள் இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு ஓரம் கட்டப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்களுக்கு இதுவே கடைசி சர்வதேச டி20 தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் 2024 மற்றும் டி20 உலகக் கோப்பை என தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியாவிற்கு ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கும் இந்த தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்படும்.

எனவே, மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை முடிந்தவுடன் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், தென்னாப்பிரிக்கா மண்ணில் நடந்த தொடரிலும் அணியை வழிநடத்திய சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். அவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டால் ரிஷப் பந்த் அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது. தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் விராட் மற்றும் ரோஹித் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருப்பதால் ஷுப்மான் கில் மற்றும் ரின்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் அவர்கள் நிச்சயமாக அணியில் இடம் பெறுவார்கள். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2024 ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா, வெங்கடேஷ் ஐயர் போன்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஐபிஎல் 2024ல் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்ற நிதிஷ் குமார் ரெட்டி ஆல்-ரவுண்டர் தேர்வாக இருப்பார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷித் ராணாவும் அணியில் இடம்பெற் கூடும். அவருடன் மயங்க் யாதவ், அவேஷ் கான், கலீல் அகமது ஆகியோரும் அணியில் சேர்க்கப்படலாம். ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ்க்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் இடம் பெறலாம்.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் கணிக்கப்பட்ட அணி: சூர்யகுமார் யாதவ் (C), ரிஷப் பந்த் (WK/VC), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), ரின்கு சிங், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, அவேஷ் கான், மயங்க் யாதவ்/மொஹ்சின் கான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.