சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் பலத்த சூறைக் காற்று வீசியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கிண்டி, அசோக் நகர், ஆலந்தூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், மைலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இடி மற்றும் மின்னலின் தாக்கமும் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
அதே போல குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த திடீர் மழையால் பல இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10.4 செ.மீ மழையும், சோழிங்கநல்லூரில் 8.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.