சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 9.45 மணியளவில் தொடங்கிய மழை, மெல்ல அதிகரித்து தற்போது இடைவிடாமல் வெளுத்து வாங்குகிறது. சென்னை அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், அண்ணாநகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதே போல சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வேலை முடித்து வீடு திரும்புவோர் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் ஒதுங்கி நின்றுகொண்டிருக்கின்றனர். அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஒரு மணி நேரத்தில் என்னவொரு மழை. நேற்று சென்னையின் மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்றால், இன்று மத்திய மற்றும் வடசென்னையில் வெளுத்து வாங்குகிறது. திருவொற்றியூரில் 85 மி.மீ, அமிஞ்சிகரை – 65 மி.மீ, தேனாம்பேட்டை – 62, மணலி – 60, கொளத்தூர் – 60.
நாளை மீண்டும் சந்திப்போம். மிதமான மழையும் சாரலும் தொடரும்” இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று நள்ளிரவில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கிண்டி, வடபழனி, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மீனம்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.