பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் பிரபல பின்னணி இசைப் பாடகராக வலம் வருபவர் அல்கா யாக்னிக்.
தமிழில் ‘இது என்ன மாயம்’, ‘காவிரியா காவிரியா’, ‘உன் முகம் கண்டாலே’ உள்ளிட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். பாலிவுட்டில் ‘Agar Tum Saath Ho’, ‘TERE NAAM’, ‘Choli Ke Peeche’ உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார். 90ஸ் மற்றும் 2000 காலங்களில் பாலிவுட்டில் உச்சத்திலிருந்தவர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் விமானப் பயணம் மேற்கொண்ட இவருக்குத் திடீரென செவித்திறன் பாதிப்படைந்துள்ளது. எந்தச் சத்தமும் கேட்க முடியாமல் போனது. இதனால் அச்சமடைந்த அல்கா யாக்னிக் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருகிறார். நீண்ட நாள்களாக யாருடனும் இது பற்றித் தெரிவிக்காத அல்கா, தற்போது இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமானப் பயணத்தின்போது திடீரென என்னுடைய செவித்திறன் பாதிப்படைந்தது. வைரல் அட்டாக்கின் காரணமாக என்னுடைய செவித்திறன் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதைக் குணப்படுத்த உரியச் சிகிச்சை எடுத்து வருகிறேன். இது குறித்து நான் யாரிடமும் எதுவும் சொல்லாமல் இத்தனை நாள்கள் அமைதி காத்திருந்தேன்.
இப்போது என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகளிடம் எனக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பகிர்ந்து கொள்கிறேன். எல்லோரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அதிக சத்தம் கேட்கும்போதும் ஹெட்போன்களைப் பயன்படுத்தும்போது அதிக கவனத்துடன் இருங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.