புதுடெல்லி: டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது குடிநீர் வாரிய அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் தண்ணீர்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சில இடங்களில் லாரிகள் மூலம் விநியோக்கப்படும் தண்ணீரை பிடிக்க பொதுமக்கள் முண்டியடிக்க வேண்டி உள்ளது.
இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. சதார்பூரில் உள்ள டெல்லி குடிநீர் வாரிய கட்டிடத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், அந்த அலுவலகத்தின் ஜன்னல்கள் உடைந்ததுடன் அப்பகுதியில் மண்பானைகள் உடைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பாஜகவினர்தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது. அத்துடன் தாக்குதல் தொடர்பான ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வீடியோவில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் பாஜகவின் கொடி வண்ணத்தில் துண்டு அணிந்திருக்கிறார்.
மேலும் அக்கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரு புறம் ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது. மறு புறம், பாஜகவினர் டெல்லி மக்களின் சொத்துகளை சேதப்படுத்துகின்றனர்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி கூறும்போது, “பொதுமக்கள் கோபத்தில் இருக்கும்போது போராட்டத்தில் ஈடுபடுவது இயற்கையானதுதான். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாஜகவினர்தான் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு நன்றி. அரசின் சொத்துகளை சேதப்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை” என்றார்.
வழக்குப் பதிவு: இதுபோல டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக எம்.பி. ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறும்போது, “டெல்லி மக்களுக்கு தேவையான தண்ணீர் ஹரியாணா அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாதது மற்றும் ஊழல் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது” என்றார்.
இதனிடையே, தண்ணீர் விநியோகம் செய்வதற்காக பொருத்தப்பட்டுள்ள பைப் வழித்தடங்களை சிலர் வேண்டுமென்றே சேதப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, பைப் வழித்தடங்களில் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என டெல்லி குடிநீர் வாரிய துறை அமைச்சர் ஆதிஷி, மாநகர காவல் ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.