நொய்டா: ஐஸ்கிரீம் டப்பாவில் பூரான் இருந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த தீபா தேவி, தனது 5 வயது குழந்தைக்கு மாம்பழஜூஸ் செய்து தர நினைத்தார். இதற்காக பிளிங்கிட் இணையதளத்தில் அமுல் நிறுவனத்தின் வெனிலா மேஜிக் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்ததாகவும், அந்த ஐஸ்கிரீம் டப்பாவை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பூரான் உறைந்து கிடந்ததாகவும் அதிர்ச்சிகரமான தகவலை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை வீடியோவாக பதிவு செய்துசமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதுகுறித்து பிளிங்கிட் நிறுவனத்தில் தீபா தேவி புகார் செய்தார். இதையடுத்து, அந்த நிறுவனம் ஐஸ்கிரீம் விலையான ரு.195-ஐ திருப்பிக் கொடுத்துவிட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு அமுல் நிறுவனத்தை வலியுறுத்துவோம் என பிளிங்கிட் நிறுவனம் தேவிக்கு பதில் அளித்தது.
இதற்கு நடுவே, இந்த வீடியோவைப் பார்த்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீபா தேவியின்வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, பிளிங்கிட் நிறுவனத்திலும் விசாரணை நடத்தி உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மும்பையைச் சேர்ந்த ஒருவர்ஆன்லைன் மூலம் வேறொரு நிறுவனத்தின் ஐஸ்கிரீமை வாங்கியபோது, அதில் மனித விரல் இருந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அமுல் நிறுவனம் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: நொய்டாவைச் சேர்ந்த தீபா தேவி அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக சமூக வலைதளத்தில் 15-ம் தேதி ஒரு வீடியோவெளியிட்டிருந்தார். இதற்குஉடனடியாக சமூக வலைதளத்தில் பதில் அளித்தோம். சுமார் ஒரு மணிநேரத்தில் அவருடைய தொடர்புஎண்ணை பெற்றோம். அவர்உஜ்வல் உன்னாட்டி பவுண்டேஷன்தலைமை செயல் அதிகாரி எனஅவருடைய சமூக வலைதள புரபைல் மூலம் தெரியவந்தது.இந்த சம்பவம் மூலம் அவருக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்த வாடிக்கையாளரை அமுல்குழு நேரில் சந்திக்க நேரம் கேட்டு தொடர்ந்து முயற்சி செய்தது.இதையடுத்து அதே நாளில் தீபா தேவியை சந்தித்துப் பேசிய அமுல் குழு, எங்கள் நிறுவனத்தின் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற தானியங்கி தொழிற்சாலை பற்றியும், எந்தஒரு உணவுப்பொருளும் விற்பனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பல்வேறு கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது குறித்தும் விளக்கம் அளித்தது. எங்கள் தொழிற்சாலையை பார்வையிட வருமாறும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
மேலும், தீபாவை சந்தித்த அமுல் குழு, பூரான் இருந்த ஐஸ் கிரீம் டப்பாவை தங்கள் வசம் வழங்குமாறு கேட்டுள்ளது. ஆனால் அவர் அதை வழங்க மறுத்துவிட்டார். வாடிக்கையாளர் அந்த டப்பாவை வழங்காதவரை, தவறு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்துவது கடினம்.
36 லட்சம் விவசாயிகளுக்கு சொந்தமான அமுல் நிறுவனம், இந்தியாவின் மிகவும் நம்பத்தகுந்த பிராண்ட்களில் ஒன்று. ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,200 கோடி பாக்கெட் அமுல் தயாரிப்புகளை சந்தைப்படுத்துகிறோம். நாடு முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட பால் பண்ணைகளில் உயர்ந்ததரம் மற்றும் உணவு பாதுகாப்புதரத்தை பராமரிக்கிறோம்.
எங்கள் தயாரிப்புகளை பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் விநியோகம் செய்வதற்கு அதிக கவனம் செலுத்துவோம் என இத்தருணத்தில் மீண்டும் உறுதி அளிக்கிறோம்.
புகாருக்கு உள்ளான ஐஸ்கிரீம் டப்பா வாடிக்கையாளரிடமிருந்து கிடைத்தவுடன், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி, எங்கு தவறு நடந்தது என்பதை வாடிக்கையாளருக்குதெரிவிப்போம்.
இவ்வாறு அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.