பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார் @ வாராணசி

வாரணாசி: விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தின் 17-வது தவணையை வாராணசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.

வாராணசி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, தேர்தல் வெற்றிக்குப் பின் முதல்முறையாக இன்று வாராணசிக்கு வருகை தந்தார். அவரை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில், பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணையை மோடி விடுவித்தார். இதன்மூலம், 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பலன்களைப் பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண் தோழிகளாகப் பயிற்சி பெற்ற 30,000-க்கும் அதிகமான சுய உதவிக் குழுக்களுக்கு இணை விரிவாக்கப் பணியாளராகப் பணியாற்றுவதற்கான சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பகவான் காசி விஸ்வநாதரின் ஆசியாலும், கங்கை தாயின் ஆசியாலும், காசி மக்களின் அன்பாலும் நான் மூன்றாவது முறையாக நாட்டின் தலைமை சேவகனாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

உங்களின் நம்பிக்கைதான் எனது மிகப்பெரிய சொத்து. உங்களின் இந்த நம்பிக்கை உங்கள் சேவைக்காக கடுமையாக உழைக்கவும், நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் என்னை ஊக்குவிக்கிறது. இரவும் பகலும் கடுமையாக உழைப்பேன். உங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற நான் எல்லா முயற்சிகளையும் செய்வேன். வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண்களாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளை நான் கருதுகிறேன். அவர்களின் அதிகாரத்துடன் எனது மூன்றாவது பதவிக் காலத்தை ஆரம்பித்துள்ளேன்.

அரசு அமைந்தவுடன் விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பங்கள் தொடர்பான முதல் முடிவு எடுக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 3 கோடி புதிய வீடுகள் கட்டும் முடிவானாலும், பிரதமர் கிசான் சம்மன் நிதியை வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திடுவதாக இருந்தாலும் இவை அனைத்துமே கோடிக்கணக்கான மக்களுக்கு உதவக்கூடியவை. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் ரூ.20,000 கோடி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது.

பிஎம் கிசான் சம்மன் நிதி உலகின் மிகப்பெரிய நேரடி பலன் பரிமாற்ற திட்டமாக மாறியுள்ளது. இதுவரை, நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்கில், 3.25 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இங்கு, வாராணாசி விவசாயிகளின் கணக்கில் 700 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பிஎம் கிசான் சம்மன் நிதியில் சரியான பயனாளிகளுக்கு பலன்களை வழங்க தொழில்நுட்பம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.