அரக்கோணம்: மக்களவைத் தேர்தலில் திமுக சூழ்ச்சி செய்தும், பணம் மற்றும் அதிகார பலத்தாலும் வெற்றி பெற்றது. அடுத்து வரும் தேர்தலில் அது நடைபெறாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் கட்சி தொண்டர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: “2026-ல் பாமக கூட்டணி ஆட்சி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சூழ்ச்சி செய்தும், பணம்,அதிகார பலத்தாலும் திமுக வெற்றி பெற்றது. அடுத்து வரும் தேர்தலில் அது நடைபெறாது. வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாமகவினர் அதிகளவில் தலைவர் பதவிகளை கைப்பற்ற வேண்டும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் பாமக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். உங்களின் முன்னேற்றத்துக்காகவே பாமக வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறோம்” என்றார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவை இல்லாதது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக புறக்கணிப்பு செய்தாலும், செய்யாவிட்டாலும் இந்த தேர்தல் பாமகவுக்கு சாதகமாகவே இருக்கும்” என்றார்.