மீண்டும் வடகொரிய வீரர்கள் ஊடுருவல்.. துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்த தென்கொரிய ராணுவம்

சியோல்:

வட கொரியா- தென் கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. எல்லைகளில் பதற்றத்தை குறைப்பதற்காக 2018-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனாலும், இரு நாடுகளும் தங்கள் வலிமையை காட்டுவதற்கான செயல்களில் ஈடுபடுவதால் சமீப காலமாக பதற்றம் அதிகரித்துள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கையையும், அமெரிக்காவின் கண்டனத்தையும் மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது வட கொரியா. வடகொரியாவை மிரட்டுவதற்காக அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபடுகின்றன. சமீபத்தில், வட கொரியா தனது நாட்டில் இருந்து பறக்கும் ராட்சத பலூன்களில் குப்பைகளை நிரப்பி தென் கொரியா எல்லைக்குள் பறக்க விட்டு சீண்டியது. இதன் தொடர்ச்சியாக ஊடுருவல்களும் அரங்கேறுகின்றன.

இன்று வட கொரிய வீரர்கள் சிலர், தென் கொரிய எல்லைக்குள் ஊடுருவி உள்ளனர். இதைக் கவனித்த தென் கொரிய வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். இதையடுத்து வட கொரிய வீரர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பி உள்ளனர். அதன்பின் சந்தேகப்படும்படியான எந்த ஊடுருவலும் இருந்ததாக தகவல் வெளியாகவில்லை.

இதுபற்றி தென் கொரிய ராணுவ தலைமை தளபதி கூறுகையில், “இன்று காலை 8:30 மணியளவில் எல்லையின் வடக்கு பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வட கொரிய வீரர்கள் 20-30 பேர் ராணுவ எல்லைக் கோட்டை கடந்து வந்தனர். அப்போது தென் கொரியா தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுட்டும் எச்சரிக்கை செய்தோம். இதேபோல் கடந்த 11-ம் தேதியும் வட கொரிய வீரர்கள் எல்லை தாண்டி ஊடுருவியபோதும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

முன்னணி எல்லைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான பீரங்கி தடுப்புகளை நிறுவுதல், சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் கண்ணிவெடிகளை புதைத்து வைத்தல் என வட கொரியாவின் கட்டுமான நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை கண்காணித்து வருகிறோம்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.