புதுடெல்லி: வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியை கைவிடுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ மூத்த தலைவர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை கைவிட முடிவு செய்திருப்பதாக மக்களவை சபாநாயகர் அலுவலகத்துக்கு முறைப்படி தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று (திங்கள்கிழமை) அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியை எதிர்த்து இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா, “இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து ஒரு தொகுதியை கைவிட ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பது அவரது உரிமை. அது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.
அதேநேரத்தில், தேர்தலின்போதே நான் ஒரு விஷயத்தை சொன்னேன். வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேறு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தால் அதனை இப்போதே தெரிவிக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை வயநாடு வாக்காளர்களுக்கு உண்டு என்று கூறி இருந்தேன். அதனை தெரிவிக்க வேண்டியது ராகுல் காந்தியின் தார்மிக கடமை என்று தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் தெரிவிக்கவில்லை. இது வயநாட்டு வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இந்த விவகாரத்தில் எனது முந்தைய கருத்தில் தற்போதும் உறுதியாக இருக்கிறேன்.
வகுப்புவாத பாசிச சக்திகளை தோற்கடிக்க இடது ஜனநாயக முன்னணியும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று திரள்வதே காலத்தின் தேவை என எங்கள் கட்சி மாநாட்டில் ஒருமனதாக அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படியே நாங்கள் வேலை செய்தோம். இண்டியா கூட்டணி இப்போதும் இருக்கிறது. வயநாட்டில் வேட்பாளரை நிறுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து கட்சி முடிவெடுக்கும். நிச்சயமாக எங்கள் முடிவு இண்டியா கூட்டணியை வலுப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.