விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து திமுக அமைச்சர்கள் வெளியேற வேண்டும்: பாமக புகார் மனு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற, தொகுதியில் தங்கி தேர்தல் பணியாற்றும் 9 அமைச்சர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என பாமக சார்பில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜிடம் வழக்கறிஞர் பாலு புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. தேர்தல் பணியை நாங்கள் துவக்கி உள்ளோம். இடைத்தேர்தல் பணியில் ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இந்த இடைத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் ஜனநாயக முறைப்படி நடத்த முடியாத சூழ்நிலையை திமுகவின் செயல்பாடுகள் உருவாக்கி உள்ளது.

9 மூத்த அமைச்சர்களை களத்தில் இறக்கி, பல்வேறு பகுதிகளைப் பிரித்து தேர்தல் பணியில் அவர்களை ஈடுபடுத்தி உள்ளனர். தேர்தல் முடியும் வரை அவர்கள் தொகுதியில் தங்கி இருந்து தேர்தல் பணியாற்றுவார்கள் என்று திமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 9 அமைச்சர்களும் அடுத்து வரும் 25 நாட்களுக்கு தொகுதியில் தங்கியிருந்து தேர்தல் பணியாற்றினால், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்படும். அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ய கூடாது என்பது அல்ல எங்களுடைய நோக்கம். நாங்கள் அதற்கு தடையும் விதிக்கவில்லை.அமைச்சர்கள் தொகுதியில் தங்கியிருந்து முகாம் அலுவலகத்தை அமைத்து அரசு அதிகாரிகளின் படை பலத்துடன் வாக்காளர்களை சந்திப்பதும், தேர்தல் பணியாற்றுவதும் ஒரு நியாயமான தேர்தல் முறையாக இருக்காது என்பதன் அடிப்படையில்தான் இங்குள்ள 9 அமைச்சர்களையும் தொகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூறுகிறோம் .

எக்காரணத்தைக் கொண்டும் தேர்தல் ஆணையம் அமைச்சர்கள் தங்கி பணியாற்றுவதை அனுமதிக்க கூடாது என்று தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம். இப் புகார் மனுவை இந்திய தேர்தல் ஆணையருக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பி உள்ளோம். மேலும் காணை ஒன்றியம் கோழிப்பட்டு ஊராட்சியில் ரூ 20 லட்சத்துக்கு ,கோயில் கட்ட நிதியுதவி வழங்க திமுகவினரால் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம். அதேபோன்று பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவரை, உங்களுக்கு வழங்கப்படுகின்ற அரசு நிதிகளை தடுப்போம் எனக்கூறி அமைச்சர்கள் மிரட்டுகின்றனர்.

எனவே, அமைச்சர்கள் தங்களுடைய அமைச்சரவைப் பணிகளை மேற்கொள்ளாமல் 25 நாட்களுக்கு தங்கி இருப்பதை அனுமதிக்ககூடாது. அமைச்சர்கள் தங்கியிருந்து தேர்தல் பணி செய்வது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. எனவே, அவர்களை தொகுதிக்குள் தங்கி இருக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். இங்கு தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது என்ற வேண்டுகோளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். தேர்தல் ஆணையம் நியாயமாக இதை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று, நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார். அப்போது சிவக்குமார் எம்எல்ஏ, மாவட்ட அமைப்புச் செயலாளர் பழனிவேல், நகர செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.