“விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம்” – எல்.முருகன் பெருமிதம்

திருவண்ணாமலை: விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது கவுரவ நிதி வழங்கும் திட்டத்தை காணொளி மூலமாக வாரணாசியில் இருந்து நாடு முழுவதும் பிரதமர் மோடி இன்று (ஜுன் 18) மாலை தொடங்கி வைத்தார். இதையொட்டி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த கீழ்நெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார். மேலும் அவர், 20 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். விவசாயிகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் என நாட்டில் 4 பிரிவினர் உள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

விவசாயத்தை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் சன்மான நிதியாக 9.28 லட்சம் பேருக்கு 17-வது தவணையாக தலா ரூ.2 ஆயிரம், வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி இன்று வழங்கி உள்ளார். விவசாயிகளுக்கு சன்மான நிதியாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை பிரதமர் மோடி வழங்குகிறார். விவசாய இடுபொருள் வாங்க, பிரதமரின் சன்மான நிதி உதவுகிறது.

3 கோடி விவசாயிகளை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் லட்சியம். இதற்காக 3 கோடி தாய்மார்களுக்கு ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கவும், விவசாய பொருட்களை எடுத்து செல்லவும், உரம் தெளிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. விவசாய பணிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

சர்வதேச சிறுதானிய ஆண்டு கொண்டாடி உள்ளோம். சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கவும், சிறுதானியத்தை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நடைபெறும் பணிகளில் மனிதர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது” என்றார்.

முன்னதாக விவசாய உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 17-வது தவணைக்கு 1,34,087 விவசாயிகளுக்கு கவுரவ நிதி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா மற்றும் வேளாண்மை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.