சென்னை: தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான தடை அமலுக்குவந்துள்ளது. இதை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (ஏஐடிபி) பெற்ற வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள், தமிழகத்தில் பயணியர் பேருந்துபோல செயல்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே,வெளிமாநில பதிவெண் கொண்டஆம்னி பேருந்துகளை, தமிழக பதிவெண்ணில் மாற்ற போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதற்கானஅவகாசம், நேற்று (ஜூன் 18) காலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அத்தகைய பேருந்துகளை சிறைபிடிக்க போக்குவரத்து ஆணையர்அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தில் 105 பேருந்துகள் மட்டும் தமிழகத்தில் மறுபதிவு செய்யப்பட்டன. எஞ்சிய 800 பேருந்துகளின் சட்டத்துக்குப் புறம்பான இயக்கத்தால் ஆண்டுக்கு ரூ.34.56 கோடி தமிழக அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது.
எனவே, சட்டத்துக்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை இனியும் அனுமதிக்க இயலாது. மேலும், இவற்றின் உரிமையாளர்கள் மீதும் அவர்கள் எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச்சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராய்ந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழகத்துக்குள் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும்.
பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் விவரம் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தால்,அதை ரத்து செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்துக்குள் முறையாக 1,535 ஆம்னி பேருந்துகள் இயங்கி வருவதால், பொதுமக்களுக்கு இடர்ப்பாடுகள் எழ வாய்ப்பு இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்று விதிப்படி இயங்கும் பேருந்துகளுக்கு தடை இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் கூறியதாவது: 2020-ம் ஆண்டு வரை தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு முன்பு வாங்கி, வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளுக்கான கடன் தொகை நிலுவையில் உள்ளது. அந்த தொகை அடைக்கப்பட்டு, வங்கியிடம் இருந்து தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மறுபதிவு செய்ய முடியும். பேருந்துகளை நிறுத்தாமல் விரைந்து மறுபதிவுசெய்து இயக்க அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.