பீகாரில் எது நடந்தாலும் அது வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இதற்கு முன்பு இரும்பு பாலத்தை திருடர்கள் திருடிச் சென்றனர். அதே போன்று ரயில்வே யார்டில் நிறுத்தப்பட்டு இருந்த ரயில் இன்ஜினை அப்படியே ஒவ்வொன்றாக கழற்றி எடுத்து சென்றுவிட்டனர். இப்போது பீகாரில் கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று திறக்கப்படும் முன்பே இடிந்து விழுந்துவிட்டது. பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள குர்ஷகாந்தா மற்றும் சிக்தி இடையே பக்ரா ஆற்றின் குறுக்கே 12 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது. அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்ட நிலையில் போக்குவரத்திற்கு திறக்கப்படாமல் இருந்தது. இன்று திடீரென அந்த பாலத்தின் மத்திய பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. பாலம் இடிந்து எஞ்சி இருந்த பகுதியில் நின்று கொண்டு மிகவும் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் இடிந்த பாலத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.
இடிந்து விழுந்த பாலம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. பொதுமக்கள் மேம்பாலம் இடிந்து விழுந்ததை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து சிக்தி எம்.எல்.ஏ.விஜய் குமார் கூறுகையில், ”கட்டுமான நிறுவனத்தின் கவனக்குறைவு காரணமாக பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இது குறித்து அரசு முழுமையாக விசாரிக்கவேண்டும்” என்றார். மேம்பாலத்தில் மத்தியில் கட்டப்பட்ட பில்லர் மட்டும் அப்படியே நின்றது. கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் முன்பே பாலம் இடிந்து விழுந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் இதே போன்று பீகாரில் கோஷி ஆற்றில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் இறந்து போனார். பலர் ஆற்றில் சிக்கிக்கொண்டனர். அடுத்தடுத்து நடந்து வரும் விபத்துகள் ஒப்பந்ததாரர்கள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமலும், தரம் இல்லாமலும் பாலத்தை கட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.