அமராவதி,
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 இடங்களில் 135 தொகுதிகளில் தெலுங்குதேசம் வென்றது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு கடந்த 12ம் தேதி அம்மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். இவரை தொடர்ந்து, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், அச்சன்நாயுடு, நாதெண்டலா மனோகர் உள்ளிட்டவர்களும் மந்திரிகளாக பதவியேற்றனர்.
அதனை தொடர்ந்து, நேற்று தலைமை செயலகத்திற்கு சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பவன் கல்யாண் தனக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துராஜ் துறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில், இன்று துணை முதல்-மந்திரி அலுவலகத்திற்கு சென்ற பவன் கல்யாண் கோப்புகளை கையெழுத்திட்டு ஆந்திராவின் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்கு சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து செய்திகள் குவிந்து வருகிறது. நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.