மும்பை: மும்பையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, அந்த விரல் ஐஸ்கிரீம் ஆலையில் பணிபுரிந்த ஊழியரின் விரல் என போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர் மருத்துவர் பிரெண்டன் ஃபெராவ் (Dr. Brendan Ferrao- 27). இவர் மும்பையின் மலாட் பகுதியில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு, பிரெண்டன் ஃபெராவ் ஆன்லைன் டெலிவரி செய்யும் செயலி மூலம் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது அவர் அதைத் திறந்து பார்த்தபோது ஓர் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் கிடந்ததைக் கண்டு பிரெண்டன் ஃபெராவ் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து இவர் போலீஸீல் புகாரளித்தார்.
அந்த விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த விரல் யாருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் சமீபத்தில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார்.
அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும், அந்த நபரின் டி.என்.ஏ.,வும் ஒத்துபோகுமாயின் இது குறித்து தகவல் வெளியாகும். அதுவரை அதிகாரபூர்வமாக ஏதுவும் கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீஸார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.