ரியாத்: கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு சவுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இந்த யாத்திரையின் போது சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 323 பேர் எகிப்து மற்றும் 60 ஜோர்டான் நாட்டு மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் மெக்காவுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் ஆண்டுக்கு 0.4 டிகிரி செல்சியஸ் என மெக்காவில் சடங்குகள் மேற்கொள்ளப்படும் முக்கிய இடத்தில் வெப்பம் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை அன்று மெக்காவில் உள்ள அல் ஹராம் மசூதியில் சுமார் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதாக சவுதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் புனித யாத்திரையின் போது காணாமல் போன எகிப்து மக்களை சவுதி அதிகாரிகளின் உதவியுடன் தேடி வருவதாக எகிப்து நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும், யாத்திரையின் போது உயிரிழப்பு ஏற்பட்டதையும் அமைச்சகம் உறுதி செய்தது. ஆனால், உயிரிழந்த எகிப்து மக்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.
யாத்திரையின் போது வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,000 பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாக சவுதி அரசு தெரிவித்தது. இருந்தாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை புதுப்பிக்காமல் உள்ளது.
வெப்பத்தை தணிக்கும் வகையில் மக்கள் தங்களது தலைகளில் குளிர்ந்த நீரை ஊற்றிக் கொள்வதாகவும், மக்களுக்கு ஐஸ்கிரீம் சாக்லேட் மற்றும் குளிர்ந்த பானத்தை தன்னார்வலர்கள் வழங்கி வருவதாகவும் தகவல்.
நடப்பு ஆண்டில் சுமார் 18 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் 16 லட்சம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹஜ் புனித யாத்திரைக்கு விசா எடுக்க செலவிட முடியாத மக்கள், முறைப்படி பதிவு செய்யாமல் பல்வேறு வழிகளில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதும் இதற்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. ஏனெனில், முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய வசதிகளை சவுதி அரசு ஏற்பாடு செய்யும்.
முறைப்படி பதிவு செய்யாத மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருந்த காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி மற்றும் முறையான தங்கும் வசதி இல்லாதது போன்ற பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.