கோயில்களின் அறங்காவலர் நியமனம் தொடர்பான வழக்கு: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழக கோயில்களின் அறங்காவலர் நியமனங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக்கூடாது என இநது சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அறநிலையத்துறை தரப்பில் தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 163 கோயில்களி்ல் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், 10 ஆயிரத்து 536 கோயில்களில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 6 ஆயிரத்து 814 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3 ஆயிரத்து 749 கோயில்களில் அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகள் நடந்து வருகிறது. நிலுவை வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆயிரம் கோயில்களில் அறங்காவலர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கோயில்களின் அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை, என விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அறங்காவலர் நியமனம் தொடர்பான பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் இன்னும் முடிக்காததால், இந்த நியமன பணிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர் அறங்காவலர்கள் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை சமர்ப்பி்க்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு (ஜூன் 21) தள்ளி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கோயில்களில் தக்கார்களாக நியமிக்கப்பட்டுள்ள அறநிலையத்துறை அதிகாரிகளை நீக்கக்கோரியும், தக்கார்கள் பணி நியமனம் தொடர்பான தகுதியை நிர்ணயித்து அதற்கான விதிகளை வகுக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தக்கார்களாக நியமிக்கப்படுவர்களுக்கு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்து ஏன் விதிகளை வகுக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை இருவாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.