சேலம், அன்னதானப்பட்டி நியூ கந்தப்பா காலனி, கணபதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி. கடந்த 12-ம் தேதி மகன் மணிகண்டன் உடன் உறவினர்கள் திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகில் வந்த போது எதிர்ப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், மகேஸ்வரி அணிந்திருந்த 9 பவுன் தாலிச் சங்கலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார். இது குறித்து மகேஸ்வரி அன்னதானப்பட்டி போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில் கொள்ளையன் அடையாளம் தெரிந்தது. அம்மாபேட்டையை சேர்ந்த பத்மநாபன் என்கின்ற திருப்பதி என்பது தெரியவந்தது. அந்நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது பள்ளப்பட்டி, கருப்பூர் பகுதியில் ஏழு இடங்களில் மின்மோட்டார் திருடியதும் தெரியவந்தது. பெண்களிடம் நகையைப் பறித்து instagram மூலம் பழக்கமான ஓசூரை சேர்ந்த தனது காதலிக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த 12-ம் தேதி பறித்த 9 பவுன் நகையை ஓசூர் காதலியிடம் கொடுத்திருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த நகையை ஓசூருக்கு சென்று அப்பெண்ணிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கொள்ளையன் திருப்பதியை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.