தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தின் தலைவராக கோபி கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தத் தேர்தல் கடந்த 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் இன்று பதவி ஏற்கின்றனர்.
இந்தப் படத்தொகுப்பாளர் சங்கம் மிகப் பழைமையான ஒன்றாகும். “ஃபிலிம் காலகட்டங்களில் ஒரு படமென்றால் இயக்குநர்கள் குறிப்பிட்ட அடிகளே ஷூட் செய்து வந்து கொடுத்தனர். ஆனால், இப்போது டிஜிட்டல் காலகட்டம் என்பதால் இயக்குநர்கள் இஷ்டத்திற்கு ஷூட் செய்துவிட்டு, மூன்று படங்களுக்கான ஃபுட்டேஜ்களை ஒரு படத்திற்குக் எடுத்துவிடுகின்றனர். மூன்று படங்களுக்கு வேலை செய்ததை போல இருந்தாலும், ஒரு படத்திற்கான சம்பளம் மட்டுமே கொடுக்கும் நிலை உள்ளது. சின்னப் பட்ஜெட் படங்களின் ரிலீஸ் எப்போது என்பதே தெரியாமல் ஆகும் சூழல்களால் அதன் எடிட்டிங் வேலைகளுக்கு முடிவே இல்லாமல் வேலை செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. இதோடு உதவி படத்தொகுப்பாளர்களுக்கு இருக்கும் சம்பளப் பாக்கி பிரச்னை ஆகியவற்றை இந்தப் புது டீம் களையலாம்” என்ற எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகக் கலைஞர்களிடம் இருக்கிறது.
சீனியர் எடிட்டர்கள் லெனின், ஶ்ரீகர் பிரசாத், ஜெய்சங்கர், தணிகாசலம் எனப் பலரின் வழிகாட்டுதலின் படி இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்றும், சங்கத்திற்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்று கருதி, இன்றைய டிரெண்டில் பணியாற்றி வரும் இளைஞர்களின் டீமை களத்தில் இறக்கியிருக்கிறார்கள். இன்றைய பிஸி எடிட்டர்கள் ரூபன், பிலோமின், பிரவீன் கே.எல்., கெவின் என ஒரு பெரிய இளைஞர்களின் வட்டமே செயலில் இறங்கி கோபி கிருஷ்ணாவைத் தலைவராகத் தேர்வு செய்துள்ளனர். ‘வழக்கு எண் 18/9, ‘தனி ஒருவன்’ எனப் பல படங்களின் எடிட்டர் இவர்.
“இதுக்கு முன்னாடியெல்லாம் பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளவங்கதான் சங்க பொறுப்புகளுக்குச் சரியா வரும்னு மைன்ட் செட்ல இருந்தாங்க. ஆனா, இந்த முறை பிஸியா இருக்கற அத்தனை பேரும் சங்கத்தின் செயல்பாடுகள்ல ஆக்ட்டிவாக இருக்கப் போறோம். படத்தொகுப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களிலும் பணியாற்றி வருகின்றனர். சங்கத்தில் 474 பேர்கள்தான் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தத் தேர்தலில் தலைவராக நானும், செயலாளராக பழனியப்பன், துணைத் தலைவர்களாக கௌதமன், சங்கர், துணைச் செயலாளர்கள் சாபு ஜோசப், கோபால கிருஷ்ணன், சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டோம். இதற்கு முன் சங்கத்தின் பொறுப்பில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஒரே டீமைச் சேர்ந்தவர்களே இருந்து வந்தனர். ஒரு பெரும் பயணத்திற்கு பிறகே அதை உடைத்து வர முடிந்திருக்கிறது. லெனின் சார், ஶ்ரீகர் பிரசாத் சார், ஆண்டனி, ரூபன் என ஜாம்பவான்கள் எங்களோடு முன்னின்றதால், இந்த வெற்றி சாத்தியமானது.
எங்கள் புது அணியின் சார்பாக நல்ல விஷயங்கள் பலவற்றைச் செயல்படுத்த உள்ளோம். சீனியர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஆயுட்கால உறுப்பினர் கார்டு அளிக்க உள்ளோம். உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது குடும்பங்களுக்குமான மருத்துவச் சிகிச்சை உதவிகள் அளிக்கின்றோம். எடிட்டிங்கைப் பொறுத்தவரை உலகத்தரத்துக்கு உயர வேண்டிய தேவை தற்போது இருக்கிறது. தினமும் ஒரு புது சாஃப்ட்வேர் வந்திக்கிட்டிருக்கு. சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்த முறை தொழில்நுட்பத்தின் நடைமுறைகளைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது என்பதால் எடிட்டிங் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றின் துணையோடு, சாஃப்ட்வேர் அப்டேட் குறித்தும் பயிற்சிகள் கொடுக்கத் திட்டமிட்டு வருகிறோம். இன்று பதவி ஏற்பு முடிந்ததும், விரைவில் எங்கள் சங்க உறுப்பினர்கள் அத்தனை பேரையும் அழைத்து, புது நிர்வாகிகள், உறுப்பினர்களின் அறிமுகக்கூட்டத்தையும் நடத்த உள்ளோம்” என்கிறார் கோபி கிருஷ்ணா.
வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துகள்!