சென்னை: சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மோசமான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 70 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும் டெல்லியில் இருந்து 158 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்ட மடித்தன. வானிலை சீராகாததால், கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம், பெங்களூருவுக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.
அதேபோல், மதுரை, மும்பை, கோவை, டெல்லி, ஐதராபாத், கோவா, வாரணாசி உள்ளிட்ட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து கொண்டிருந்தன. மழை குறைந்து வானிலை சீரடைந்தது, விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.
தொடர்ந்து, திருச்சி மற்றும் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானங்களும் சென்னை வந்து தரையிறங்கின. மோசமான வானிலையால் சென்னையில் இருந்து துபாய், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, பாங்காக், டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.