பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் இந்தியாவில் தயாரான ஆயுதங்கள், தளவாடங்கள் இடம்பெற்று பார்வையாளர்களைக் கவர்ந்தன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யூரோசாட்டரி 2024 என்ற பெயரில் ராணுவக் கண்காட்சி கடந்த 17-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றன.
டிஆர்டிஓ சார்பில் பினாக்கா மல்ட்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் சிஸ்டம், எல்சிஏ தேஜாஸ் போர் விமானம், அர்ஜுன் பீரங்கி, கவச வாகனங்கள், வருணாஸ்த்ரா கனரக டார்ப்பிடோ உள்ளிட்டவை இடம்பெற்றன.
கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன இயக்குநர் மனோஜ் ஜெயின், கே.வி. சுரேஷ் குமார்,டிஆர்டிஓ அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்றன. மேலும் தனியார் நிறுவனங்களான நிபே டிபன்ஸ், பாரத் போர்ஜ் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்று தங்களது தயாரிப்புகளை கண்காட்சியில் இடம்பெறச் செய்திருந்தன.
பாரிஸில் நடைபெறும் இந்த கண்காட்சியானது ஐரோப்பாவிலேயே நடைபெறும் பெரியளவிலான பாதுகாப்பு கருவிகள் கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.