மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு: மீண்டும் சூடுபிடிக்கும் `மேக்கேதாட்டு’ – மௌனம் கலைப்பாரா முதல்வர்?

தமிழ்நாட்டின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என உச்ச நீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பின்னும், கர்நாடகா மேக்கேதாட்டு அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சோமண்ணா வலியுறுத்தியிருப்பது தமிழ்நாடு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சோமண்ணா

தமிழகத்துக்கு செய்த மாபெரும் துரோகம்:

இந்த பிரச்னை தொடர்பாக கண்டனம் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து துரோகம் செய்வதையே தமிழகத்தை ஆளும் திமுக அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் செய்துவந்த நிலையில், போதாக்குறைக்கு தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு முனைப்புகாட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல. தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணாவை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும். ஏற்கனவே காவிரி மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேக்கேதாட்டு பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை ஆளும் பொம்மை முதலமைச்சர் பேசா மடந்தையாக இருப்பதன் காரணம் புரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்திருக்கிறார்.

`தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது!’

அதேபோல பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “மேக்கேதாட்டு அணை சிக்கல் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களின் அரசுகள் பேச்சு நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு பேச்சு நடத்தினால் மேக்கேதாட்டு அணை விவகாரத்திற்கு தீர்வு காண முடியும் என்றும் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா கூறியிருக்கிறார். மேக்கேதாட்டு அணை சிக்கலில் நீதியின் பக்கம் நிற்க வேண்டிய மத்திய அமைச்சர் கர்நாடகத்தின் குரலாக ஒலித்திருப்பது கண்டிக்கத்தக்கது. காவிரி ஆற்று நீர் சிக்கலில் தமிழ்நாட்டின் உரிமைகளையும், தண்ணீரையும் பறிக்கும் நோக்கத்துடன் கர்நாடக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம் தான் மேக்கேதாட்டு அணை திட்டம்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேக்கேதாட்டு அணையை கட்ட முடியாது. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில் அது குறித்து தமிழக அரசு எவ்வாறு பேச்சு நடத்த முடியும்? அவ்வாறு பேச்சு நடத்த ஒப்புக்கொள்வதே தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்ப்பதாகத் தான் அமையும்.

எடப்பாடி பழனிசாமி

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேக்கேதாட்டு அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகிவிடும். எனவே, மேக்கேதாட்டு அணையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் வி.சோமண்ணா கர்நாடகத்தை சேர்ந்தவர். பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போதே மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர். மேக்கேதாட்டு அணை தொடர்பாக பேச்சு நடத்த மத்திய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழக அரசு ஏற்கக் கூடாது!” எனத் தெரிவித்திருக்கிறார்.

ராமதாஸ்

`நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது!’

தொடர்ந்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், “தமிழகத்தை பாலைவனமாக்கும் மேக்கேதாட்டு அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என உச்ச நீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பிறகும், மேக்கேதாட்டு அணை குறித்த அமைச்சர் சோமண்ணாவின் பேச்சு ஒருதலைபட்சமாக அமைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முயற்சி செய்வது சோமண்ணா வகிக்கும் அமைச்சர் பதவி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, இனியாவது இரு மாநிலங்களுடையேயான பிரச்னைகளை அதிகப்படுத்தும் விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தவிர்ப்பதோடு, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக நடுநிலையோடு செயல்பட வேண்டும்!” என வலியுறுத்தியிருக்கிறார்.

அதேபோல த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், “மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணா மேக்கேதாட்டு அணை சம்பந்தமாக தமிழக டெல்டா விவசாயத்தின் தண்ணீர் தேவையை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு நியாயமாக செயல்பட வேண்டும். மாறாக மேக்கேதாட்டு பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும். கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை சம்பந்தமாக கூட்டாட்சி தத்துவத்திற்கு உட்பட்டு, சட்டத்திற்கு உட்பட்டு, மேலாண்மை ஆணையத்திற்கு உட்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு செயல்படாமல் தன்னிச்சையாக செயல்படுவது நியாயமில்லை!” என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின் விவசாயிகள்

மேக்கேதாட்டு தொடர்பாக கர்நாடக அரசும் மத்திய அரசும் பிரச்னையைக் கிளறுவது இது முதல்முறை அல்ல! இந்த நிதியாண்டில்தான் மேக்கேதாட்டு அணைக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது கர்நாடகா. தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரத்திலும் பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேக்கேதாட்டு அணை நிச்சயம் கட்டிமுடிக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். கர்நாடகா காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அனைவருமே தொடர்ந்து மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்காக முழுவீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இதுபற்றி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலுவான ஒரு கண்டனத்தைக்கூட தெரிவிக்காமல் இருந்துவருவது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திவருகிறது. அதேபோல, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் மேம்போக்கான பதிலுடையுடன் பிரச்னையை கடந்துசெல்வதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. டெல்டா விவசாயிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே வாழ்வாதாரமாக இருக்கும் காவிரி உரிமை பிரச்னையில், கூட்டணி தர்மத்துக்காக தமிழ்நாடு அரசு மெத்தனமாக செயல்படக்கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேக்கேதாட்டு விவகாரத்தில் மெளனம் கலைப்பாரா முதல்வர்?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.