புதுடெல்லி: அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வெப்ப அலை சிகிச்சை மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதீத வெப்பம் காரணமாக டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 5 பேர் உயிரிந்துள்ளனர். கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 12 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லோகியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அஜய் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “மொத்தம் 22 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வெப்ப தாக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள 12 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். நோயாளிகள் அனைவரும் வெயிலில் தீவிர சூழ்நிலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வட இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை முதல் கடுமையான வெப்ப அலை நிலைகள் தொடரும் என்றும், அதன் பிறகு படிப்படியாக குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
ஜூன் 30-ம் தேதி டெல்லியில் பருவமழை தொடங்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. “டெல்லியில், வெப்பநிலை சுமார் 40 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் டெல்லியில் பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் புழுதிப் புயல்கள் மற்றும் லேசான – தீவிர மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம்” என்று ஐஎம்டி விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மாநில மின்விநியோக கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:22 மணியளவில், டெல்லியின் உச்ச மின் தேவை 8,647 மெகாவாட்டாக இருந்தது. இது தேசிய தலைநகரின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாததாகும். அனல் காற்று டெல்லியில் தண்ணீர் நெருக்கடியை தீவிரமாக்கியுள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த சூழலில், வெப்பச்சலனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க அனைத்து மருத்துவமனைகளும் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு மருத்துவமனைகளில் வெப்ப அலை நிலைமை மற்றும் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த நட்டா, அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வெப்ப அலை சிகிச்சை பிரிவுகளை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.