Shreyas Iyer Comeback: தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரை நியமித்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் விளையாட உள்ளார்.
ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வென்றுள்ளார். இதன் மூலம் கொல்கத்தா 3வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. கவுதம் கம்பீர் கேகேஆர் அணியின் மெண்டாராக செயல்பட்டார். எனவே கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆன பிறகு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இடம் பெறலாம். இது தவிர ஜூலை 5 ஆம் தேதி தொடங்கும் இந்தியா – ஜிம்பாப்வே தொடருக்கான டி20 அணியிலும் இடம் பெற ஷ்ரேயாஸ் ஐயர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஐபிஎல்லில் ஒன்றாக செயல்பட்டு வெற்றியை பெற்றுள்ள இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டுள்ளனர் என்பதால் அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிசிசிஐ ஆண்டு சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இருவரையும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் கவனம் செலுத்தும்படி பிசிசிஐ பரிந்துரைத்தது. ரஞ்சி கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிக ரன்களை குவித்தார். மேலும் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் அதிக இளம் வீரர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.
அபிஷேக் சர்மா, ரியான் பராக், மயங்க் யாதவ், ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, விஜய்குமார் வைஷாக் மற்றும் யாஷ் தயாள் போன்ற இளம் வீரர்கள் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் ஒரு சிலருக்கு ஜிம்பாப்வே டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் ஷ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளில் இடம்பெறாத பட்சத்தில் இலங்கையில் நடக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் ஐயர் அரைசதம் அடித்தார். மேலும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் 500+ ரன்களை அடித்துள்ளார்.
சீனியர் வீரர்களுக்கு ஓய்வு
ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களுக்கு ஒயிட் பால் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட வாயுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளதால் அதில் கவனம் செலுத்த உள்ளனர். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தலா இரண்டு ஹோம் டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது மண்ணில் 5 போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஜிம்பாப்வே தொடரில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் ரின்கு சிங், ஷுப்மான் கில், அவேஷ் கான் மற்றும் கலீல் அகமது போன்றவர்களும் ஜிம்பாப்வேக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.