கல்பாக்கம்: நடிகர் விஜயின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தமிழக மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது என தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயின் 50-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நரேன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று துய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் பேசியது: ”கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு வரும் 28-ம் தேதி மற்றும் ஜூலை மாதம் 3-ம் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக நேரில் சந்தித்து பரிசுகளை வழங்கி கொளரவிக்க உள்ளார்.
மேலும், நலத்திட்ட உதவிகளுக்கான உதவிகளை கட்சி நிர்வாகம் வழங்கவில்லை. கட்சியின் நிர்வாகிகள் தங்களின் சொந்த செலவில் வழங்கியுள்ளனர். அதேபோன்று, நிர்வாகிகள் யாரும் கடன் வாங்கி செலவு செய்யக் கூடாது என தலைவர் தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் மட்டுமே நமக்கு இலக்கு. அதில் நாம் நினைப்பதை செய்து முடிப்போம். கடந்த 30 ஆண்டுகளாக தமிழக வெற்றிக் கழகம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.