வாராணசி: ‘பிஎம் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தில் 17-வது தவணையாக 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி வாராணசியில் நேற்று வழங்கினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 18-வதுமக்களவை தேர்தலில், உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த9-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக மத்தியில் ஆட்சிஅமைத்தது.
பிரதமராக பதவியேற்றதும், ‘பிஎம் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தின்கீழ்17-வது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில் மோடி முதல்கையெழுத்திட்டார். இத்திட்டத்தின்கீழ், விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக 3 தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று தனது சொந்த தொகுதியான வாராணசிக்கு சென்றார். அங்கு நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, ‘பிஎம் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தில் 17-வது தவணையாக 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை அவர் வழங்கினார்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: காசி விஸ்வநாதர், கங்கை தாயின்ஆசியால் 3-வது முறையாக பிரதமராக பதவியேற்று உள்ளேன். தொடர்ச்சியாக 3-வது முறை தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இது சுமார் 60ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ள அரிய சாதனை. வாராணசி தொகுதியில் இருந்து 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். வாராணசி மக்களும், கங்கை தாயும் என்னை தத்தெடுத்துள்ளனர்.
இத்தாலியில் சமீபத்தில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்றேன். அந்த நாடுகளின் மொத்த வாக்காளர்களைவிட இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகம். 31 கோடி பெண்கள் உட்பட சுமார் 64 கோடி இந்தியர்கள் தேர்தலில் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
விவசாயிகள், இளைஞர்கள், பெண்களை நாட்டின் தூண்களாக கருதுகிறேன். இதில் விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர்.
உலகம் முழுவதும் இந்திய உணவு: இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக, சிறுதானியங்கள், மூலிகை மருத்துவ பொருட்கள், அழகுசாதன பொருட்கள், இயற்கை வேளாண் விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும். உலகம் முழுவதும் ஒவ்வொருவரது வீட்டிலும் இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட வேண்டும். இதுவே எனது கனவு, லட்சியம்.
உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மத்திய, மாநிலஅரசுகளின் முயற்சியால் வெளிநாடுகளுக்கு வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தஏற்றுமதி மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.
இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பருப்பு உற்பத்தி, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. விரைவில் நாம் 3-வது இடத்தை எட்டுவோம். இதற்கு இந்திய வேளாண் துறை முக்கிய பங்களிக்கும்.
‘பிஎம் கிசான் சம்மான் நிதி’ திட்டம் உலகிலேயே மிகப்பெரிய நேரடி மானிய உதவி திட்டம் ஆகும்.இன்றைய தினம் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
3 கோடி பெண்கள் லட்சாதிபதி: நாடு முழுவதும் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 3 கோடி பெண்கள்லட்சாதிபதிகளாக உருவாக்கப்பட்டுள்ளனர். ‘பிஎம் ஆவாஸ் யோஜனா’திட்டத்தின்கீழ், ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் புதிதாக 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக இரவு, பகலாக தொடர்ந்து உழைப்பேன்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
விவசாயிகள் மாநாட்டை தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர்நடைபெற்ற கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.