விஷ்வக் சென் தெலுங்குத் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர்.
கடந்த மே 31-ம் தேதி இவர் நடித்த ‘Gangs of Godavari’ திரைப்படம் தெலுங்கில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருக்கும் இவர், சமீபத்தில் யூடியூபர் ஒருவரை விமர்சித்திருக்கிறார். பிரமாண்ட பொருட் செலவில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடித்திருக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து அந்த யுடியூபர் ஹாலிவுட்டின் படங்களின் சாயல் இருப்பதாகக் கூறியிருந்ததையும், படத்தின் கதையைக் கணிக்கும் வகையில் பேசியிருந்ததையும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள விஷ்வக் சென், “திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தைப் பற்றி விமர்சித்தும், கதையைப் பற்றி யூடியூப்பில் பேசியும் பணம் பார்க்கிறார்கள். ஒரு படத்திற்குப் பின்னால் ஆயிரக்கணக்கானோர் வேலை பார்க்கிறார்கள். அதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் ஆயிரக்கணக்கானோரின் வேர்வையும், ரத்தமும் கலந்திருக்கிறது.
இதையெல்லாம் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் படம் வெளியாவதற்கு முன்பே விமர்சித்து, கதையைப் பற்றி ஏதாவது பேசி பணம் பார்த்து படத்தையே கெடுத்து விடுகிறார்கள். பைரஸியைவிடவும் ஆபத்தானது இவர்களின் இந்தச் செயல். முதலில் ஒரு 10 நிமிடத்திற்கு ஒரு குறும்படத்தை எடுத்துப் பாருங்கள். அப்போதுதான் படம் எடுப்பதற்கான உழைப்பைப் பற்றி உங்களுக்குப் புரியும். அதை எடுத்துவிட்டு வந்து இப்படியெல்லாம் பேசுங்கள்” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு அந்த யூடியூபர், “வாருங்கள் இருவரும் நேருக்கு நேர் உட்கார்ந்து நேரலையில் விவாதம் செய்வோம்” என்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார். இதைக் கண்ட நடிகர் விஷ்வக் சென் கோபத்துடன், “முதலில் ஒரு 10 நிமிட குறும்படம் எடு, ஆங்கிலம் சரியாகக் கற்றுக் கொள் பிறகு நாம் பேசலாம்” என்று ‘#pestsofcinema’ என்ற ஹேஷ்டேக்குடன் மறுபதிவிட்டிருக்கிறார். இது தெலுங்குத் திரையுலகில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.